மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்க ள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (22) மாலை 3 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கத்திடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மற்றும் நினைவேந்தல் ஒழுங்கமைப்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து அவர் கேள்விக்கு பதிலளிக்கையில்,
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்களுக்கு புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தி கொள்பவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தொடர்பாக நாங்களும் அறிந்திருக்கின்றோம்.
குறிப்பாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த பாதிரியார் ஒருவர் தொடர்ச்சியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இது தொடர்பாகவும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். எனவே இந்த விடயங்கள் தொடர்பாக மக்கள் அச்சம் இல்லாமல் முறைப்பாடுகளை வழங்க வேண்டும்.
தங்களுடைய சொந்த பெயர்களில் முறைப்பாடுகளை வழங்க அச்சமாக இருந்தால் தங்கள் பெயர்களை குறிப்பிடாமல் கூட மக்கள் முறைப்பாடுகளை வழங்கலாம்.
அதேவேளை ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் தெற்கில் முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவாத அமைப்புக்களின் தாக்குதல்கள் தொடர்பாகவும் நாங்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளிடம் முறையிட தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் ஜீன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரிலும் இந்த விடயங்கள் தொடர்பான அறி க்கையை முதலமைச்சர் ஊடாக சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.