கருணாநிதியின் வைர விழா அரசியல் ரீதியானது கிடையாது: ஸ்டாலின்

256 0

கருணாநிதியின் வைர விழா அரசியல் ரீதியானது கிடையாது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று, அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:

தலைவர் கலைஞர் அவர்களின் 60 ஆண்டுகால சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சி மற்றும் 94 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஆகிய இரண்டையும் இணைத்து மாபெரும் விழாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் சார்பில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட இருக்கின்றது.

ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் உள்ள திடலில் எதிர்வரும் 3 ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் விழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேசிய அளவிலான பல தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான கு நிதிஷ்குமார் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர். சீதாராம் யெச்சூரி எம்.பி., , ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி., ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி., தேசிய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்பவார் எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஒபராயன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலைஞரை வாழ்த்தி உரையாற்ற இருக்கின்றார்கள்.

கேள்வி: தலைவர் கலைஞரின் உடல் நிலை எப்படி இருக்கிறது, இந்த விழாவில் அவர் பங்கேற்பாரா?

பதில்: நான் ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். இப்போதுள்ள சூழ்நிலையில் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லை. ஒரு வேளை மருத்துவர்கள் அனுமதித்தால் அவர் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதுதான் இப்போதுள்ள நிலை.

கே: அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய நிகழ்ச்சியாக வைரவிழா நடைபெறும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி ஏதேனும் பேசப்படுமா?

ப: அதற்காக நடைபெறும் விழாவல்ல இது. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் அறிவிப்பது தொடர்பாக அன்னை சோனியா காந்தி என்னிடம் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார். அதேபோல மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் கலந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்த பிறகுதான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கப்படும். இந்த விழா அதற்காக நடைபெறவில்லை. இது தலைவர் கலைஞரின் வைரவிழா மற்றும் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா என்பது தான் உண்மை.

கே: நீங்கள் பலமுறை வலியுறுத்திய பிறகு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை நடத்தப்படுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதே?

ப: யார் அறிவித்திருப்பது? அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகாத நிலையில், நாங்கள் முறையாக கடிதம் கொடுத்திருக்கிறோம். சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். ஆனால், அங்கிருந்து முறையாக எந்தவித பதிலும் எங்களுக்கு வரவில்லை. அது வந்த பிறகு அதுபற்றி முடிவு செய்யப்படும்.

கே: மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவையை கூட்ட முன்வராதது ஏன்?

ப: சட்டப்பேரவையை கூட்டினால் மெஜாரிட்டி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வு அவர்களுக்கு உள்ளது. அதனால் தான் போட்டிப் போட்டுக் கொண்டு சென்று பிரதமரை சந்திக்கும் நிலை இருக்கின்றது. எனவே, பேரவையை கூட்டத் தயங்குகிறார்கள் என்பதே எனது கருத்து.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.