ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சவூதி மன்னர் சல்மான் ஆகியோர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில், அமெரிக்கா மீது ஈரான் அதிபர் ஹசன் ராவுஹானி காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சவூதி மன்னர் சல்மான் ஆகியோர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில், அமெரிக்கா மீது ஈரான் அதிபர் ஹசன் ராவுஹானி காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறை பயணமாக சவூதி அரேபியா நாட்டுக்கு சென்றுள்ளார்.
அவருடன் மனைவி மெலினா டிரம் உள்ளிட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள் சென்றுள்ளனர். இதனையடுத்து, அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ தளவாடங்களை வாங்க சவூதி அரேபியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அப்போது, பேசிய டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றினைய வேண்டும் என பேசினார். மேலும், ஈரானின் ஏவுகணை சோதனைகளுக்கும் கண்டனம் தெரிவித்தார்.
சவூதி மன்னர் சல்மான் ஒருபடி மேலே சென்று ஈரான் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என குற்றம் சாட்டினார். இந்நிலையில், டிரம்ப் மற்றும் மன்னர் சல்மான் கருத்துக்களுக்கு பதிலடி தரும் விதமாக ஈரான் அதிபர் ஹசன் ராவுஹானி ,”ஈரான் ஏவுகணை சோதனை நடத்துவது தொடர்ந்து நடக்கும், இதற்கு அமெரிக்காவின் அனுமதியை நாங்கள் பெற வேண்டிய அவசியமில்லை” என காட்டமாக கூறியுள்ளார்.
மேலும், ”முற்றிலும் ஈரான் நாட்டின் பாதுகாப்பிற்காகவே ஏவுகணைகள் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படுகிறது. இது தொடர்ந்து நடைபெறும். எவரிடமும் அனுமதி பெற தேவையில்லை” எனவும் தெரிவித்தார். ஈரான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக ஹசன் ராவுஹானி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.