கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் காணியில், புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்(கணொளி)

342 0

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் 30 வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவில் காணியில், கடந்த எட்டு வருடங்களாக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த 30 வருடங்களாக பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.

கிராமத்தை சேர்ந்த தனியார் ஒருவர் வழங்கிய காணியில், பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டு பொது மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த நிலையில், புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீள்குடியேற கிருஸ்ணபுரம் மக்கள் கிராமத்திற்கு சென்ற போது, பிள்ளையார் இருந்த அரச மரத்திற்கு கீழ் புத்தர் சிலை இருப்பதனையும், பிள்ளையார் கோவில் காணியில் சிறிய புத்த கோவில் இருப்பதனையும் அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனினும் எதுவும் பேச முடியாத நிலையில் கடந்த 8 வருடங்களாக மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிள்ளையார் சிலை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டு, அதே காணியில் புத்த கோவிலுக்கு அருகில், வடக்கு திசையை நோக்கி சிறியளவில் பிள்ளையார் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு திசையை நோக்கி பார்த்திருந்த பிள்ளையார் வடக்கு திசைக்கு திருப்பப்பட்டுள்ள நிலையில், புத்தர் சிலை கிழக்கு திசையில் வீதியை பார்த்தப்படி அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

இது தொடர்பில் பல தடவைகள் பலரிடம் முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.