ரஷிய ஹெலிகாப்டரை சுட்டு 5 பேரை கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிபர் புதினுக்கு வீடியோவில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் இருக்கும் அலப்போ நகரை மீட்க அந்நாட்டு ராணுவத்துக்கு ரஷியா உதவி செய்து வருகிறது. தீவிரவாதிகள் இலக்கை குறி வைத்து ரஷிய போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்படர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் தீவிரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரஷியா மீதும் அதிபர் புதின் மீதும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று ரஷியாவின் ‘எம்.ஐ.8’ ரக ராணுவ ஹெலிகாப்டர் குண்டு வீச்சு நடத்தியது. இந்த ஹெலிகாப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்.
இதனால் ஹெலிகாப்டர் எரிந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இத்தாக்குதலில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேரும் பலியாகினர்.இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆன்லைனில் புதிதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், சிரியாவில் அமெரிக்காவுடன் இணைந்து குண்டு வீசும் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
5 தீவிரவாதிகள் அமர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவன் கத்தியை காட்டிய படி புதினுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் மிரட்டுகின்றான். புதின் கவனியுங்கள். ‘நாங்கள் ரஷியா வருவோம். வீட்டிற்கே வந்து உங்களை கொலை செய்வோம்’ என தெரிவிக்கிறான்.இந்த வீடியோ 9 நிமிடம் ஓடுகிறது. இதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பகிரங்கமாக பொறுப்பு ஏற்க வில்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் வலை தளத்தில் இது வெளியாகி இருக்கிறது.