டொனால்ட் டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்

387 0

4E5770BB-EDE6-4906-8C6A-D9CDCABE63BE_L_styvpfஅமெரிக்காவுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துவரும் அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் ’குப்பை பேச்சுக்கு’ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார்.

அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பல இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவரும் டிரம்ப், அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என பொருள்படும்படி அவ்வப்போது கருத்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு திரட்டும் கூட்டம் சமீபத்தில் பிலடெல்பியா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈராக் போரில் பங்கேற்று வீரமரணம் அடைந்த அமெரிக்க இஸ்லாமிய ராணுவ வீரர் ஹுமாயூன் கானின் தந்தையான கிஸர் கான் தனது மனைவி கஸாலா கானுடன் மேடை ஏறினார்.

ஒட்டுமொத்தமாக அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரையும் தேசத்துரோகிகளாக சித்தரித்து கருத்து வெளியிட்டுவரும் டொனால்ட் டிரம்பை அவர் நேரடியாக தாக்கி பேசினார். தாய்நாட்டுக்காக என் மகனைப் போல் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

நானும் எனது மனைவியும் எங்களது மகனான கேப்டன் ஹுமாயூனை இந்த நாட்டுக்காக தியாகம் செய்துள்ளோம். டொனால்ட் டிரம்ப் இந்த நாட்டுக்காக என்ன நன்மை செய்துள்ளார்? எதை தியாகம் செய்துள்ளார்? நாட்டுக்காக உயிர்நீத்த போர் வீரர்களின் நினைவு சின்னத்துக்கு அவர் ஒருமுறையாவது சென்று அஞ்சலி செலுத்தியது உண்டா? என கிஸர் கான் ஆவேசமாக பேசினார்.

மேலும், அமெரிக்க நாட்டின் அடிப்படை அரசியலமைப்பு சட்டத்தை டொனால்ட் டிரம்ப் தெரிந்து வைத்துள்ளாரா? என கேள்வி எழுப்பிய அவர், வேண்டுமானால் நான் இந்த மேடையில் கையில் வைத்திருக்கும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை அவருக்கு இரவலாக தருகிறேன்.

அமெரிக்காவில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமஉரிமையையும், சமவாய்ப்புகளையும் இந்த அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்துகிறது என பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இதை சரியாக படித்துப் பார்த்துவிட்டு அமெரிக்க முஸ்லிம்களைப் பற்றி அவர் விமர்சிக்கட்டும் என காரசாரமாக அவர் கூறினார்.

அவரது பேச்சு அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஊடகங்களிலும், உலக ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தது.

இதற்கு பின்னர் சில நிகழ்ச்சிகளில் பேசிய டொனால்ட் டிரம்ப், ஈராக் போரின்போது குண்டுவெடிப்பில் உயிரிழந்த ராணுவ வீரர் ஹுமாயூனின் பெற்றோரை கேலி செய்யும் விதமாக கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், போர்களில் காயமடைந்த முன்னாள் அமெரிக்க படைவீரர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, குடியரசு கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் குப்பைத்தனமான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் ஒபாமா பேசியதாவது:-இரண்டு தரைப்படை போர்களை சந்தித்த பிறகு நமது படையின் அளவு குறைந்திருப்பது இயல்பானதுதான். நமது படைபலத்தை அதிகரித்து தயார்படுத்தவும், நவீனப்படுத்தவும் வேண்டியுள்ளது. இந்த பூமியிலேயே அமெரிக்க ராணுவத்துக்கு நிகரான தரைப்படை உலகின் எந்த நாட்டிலும் இல்லை;

நமது கப்பற்படை உலகின் மிகப்பெரிய வீரியம்மிக்க கப்பற்படையாக உள்ளது. நமது விமானப்படையின் ஆற்றலுக்கு இணையாக வேறு எதையும் காட்ட முடியாது. நமது நாட்டிடம் உலகின் மிகச்சிறந்த கடலோர காவல் படையும் உள்ளது.

கடந்தகால வரலாற்றில் இவற்றை கொண்டு மிக ஆற்றல்கொண்ட போரிடும் வல்லமை கொண்ட படைகளாக நமது முப்படைகள் திகழ்ந்துள்ளன. இனியும் திகழும்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்து, மண்ணைக் கவ்வ வைக்க போராடும் நமது படைகளின் சக்தியை எந்த நட்புநாடும், எதிரிநாடும் சந்தேகக் கண்ணோடு பார்க்க முடியாது. இந்த நாட்டின் முப்படைகளின் தலைவர் என்ற முறையில் அமெரிக்க ராணுவத்தை பற்றியும், நமது படை வீரர்களைப் பற்றியும் சிலர் குப்பைத்தனமாக பேசி வருவதை கேட்டு நான் களைத்துப் போய் இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பாகிஸ்தானில் 1976-ம் ஆண்டு பிறந்த ஹுமாயூன் கான் 1978-ம் ஆண்டுவாக்கில் தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறினார். பள்ளிக்காலத்திலேயே அமெரிக்காவை நிர்மாணம் செய்வதில் முக்கிய பங்காற்றிய தாமஸ் ஜெபர்சன் போல் தாய்நாடான அமெரிக்காவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கொள்கையை மனதில் உறுதியாக பின்பற்றிய ஹுமாயூன், விர்ஜினியா பல்கலைக்கழக்கத்தில் படித்த காலத்தில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் சேர்ந்தார்.

000-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற பின்னர் நான்காண்டுகள் ராணுவத்தில் கடுமையான பணியாற்றி கேப்டன் என்ற தகுதிக்கு உயர்ந்தார்.சதாம் உசேனின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக ஈராக் மீது அமெரிக்கா போர்தொடுத்த பின்னர் அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க வீரர்கள் படையில் இடம்பெற்றிருந்த கேப்டன் ஹுமாயூன் பாக்தாத் நகரின் வடகிழக்கு பகுதியான பகுபாவில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ முகாமில் கடமையாற்றி வந்தார். 8-6-2004 அன்று அந்த முகாமின் நுழைவுவாயிலில் அவர் காவல் பணிக்கு தலைமை பொறுப்பு ஏற்றிருந்தார்.

அன்று காலை முகாமின் உள்ளே நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது முகாமின் வாசலை ஒரு கார் வேகமாக நெருங்கியது. அந்த காரின் குறுக்கே பாய்ந்த கேப்டன் ஹுமாயூன் இரு கைகளையும் உயர்த்தி ஆட்டியபடியே காரை நிறுத்தும்படி சைகை காட்டியபடி முன்னேறி சென்றார்.

இருப்பினும், அந்த கார் வேகமாக முன்னேறி வந்ததை கண்டு அதிர்ச்சியடந்த அவர் ஏதோ விபரீதம் நடக்கப் போவதை உணர்ந்தார். கார் முகாமின் உள்ளே நுழைந்து விட்டால் உள்ளே இருக்கும் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் கொல்லப்படுவார்கள் என யூகித்து கொண்ட அவர் அந்த காரின்மீது பாய்ந்தார்.

குண்டுகள் நிரப்பப்பட்டிருந்த அந்த கார் அவர்மீது மோதியதில் பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் கேப்டன் ஹுமாயூன் வீரமரணம் அடைந்தார்.

சிதைந்து, சினனாபின்னமாகிப்போன அவரது உடல் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது பெற்றோர் வாழ்ந்துவரும் விர்ஜினியா மாநிலத்தில் உள்ள அர்லிங்டன் போர் வீரர்கள் நினைவிடத்தில் ஹுமாயூனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் மந்திரியும், தற்போதைய அதிபர் பதவி வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.