தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதாக, குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
மேலும், எம்.ஜீ.ஆர் வழங்கிய பெரும்பாலான நிதி ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவே பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், லெபனான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலிகளுக்காக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எழுச்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளும் போதுமான வாய்புகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுமாறு இந்திய உளவுப் பிரிவான றோ விற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முதன் முதலாக பணித்திருந்தார் என குறிப்பிட்ட கேபி, அதுவே புலிகள் அமைப்பு மீதான இந்தியாவின் ஈடுபாட்டின் ஆரம்பப் புள்ளி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்கொலை குண்டுதாரிகளுக்கு போதைப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என குறிப்பிட்ட அவர், மூளைச்சலவை செய்து தமது உயிரை தியாகம் செய்ய வைக்கப்பட்டனர் எனவும் கூறியுள்ளார்.
அன்டன் பாலசிங்கம் தற்கொலை குண்டுதாரிகள் குறித்த செயற்பாடுகளை எதிர்த்தாலும், அதைத் தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தாகவும் குமரன் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.