குஜராத் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ள ஆனந்தி பென் படேல் தமிழ்நாட்டின் கவர்னராக விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அப்போதைய குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை முன்னிறுத்தி பா.ஜனதா தேர்தலை சந்தித்தது.இதில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதையடுத்து நரேந்திரமோடி பிரதமரானார்.இதனால் காலியான முதல்-மந்திரி பதவியில் மூத்த மந்திரி ஆனந்திபென் பட்டேல் அமர்த்தப்பட்டார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்த நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஆனந்தி பென் படேல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஆனந்தி பென் படேல் “பா.ஜனதா கட்சி கொள்கைப்படி 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆட்சி பதவியில் இருப்பதில்லை. எனக்கு 75 வயது ஆகப் போவதால் நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுகிறேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பி விட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அகில இந்திய பா.ஜனதா தலைவர் அமித்ஷாவிடம் கேட்ட போது, ஆனந்திபென் பட்டேல் ராஜினாமா கடிதம் வந்ததை உறுதி செய்தார். கட்சியின் பாராளுமன்ற குழு கூடி, ஆனந்திபென் படேல் ராஜினாமா சம்பந்தமாக ஆலோசனை நடத்தும். அதைத்தொடர்ந்து அடுத்த முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார்.
புதிய முதல்-மந்திரியாக மாநில சுகாதார மந்திரி நிதின்பாய் பட்டேல் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா மாநில தலைவர் விஜய்ரூபானி, மாநில நிதி மந்திரி சவுரப் படேல் ஆகியோரும் முதல்-மந்திரி பதவி போட்டியில் உள்ளனர்.ஒரு வேளை அகில இந்திய தலைவர் அமித்ஷாவே குஜராத் முதல்-மந்திரியாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் அமித்ஷா மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் குஜராத் முதல்-மந்திரி ஆனந்திபென் பட்டேல் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். என்கவுண்டர் வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டதால், அவரை முதல்-மந்திரியாக்க வசதியாகத்தான் ஆனந்தி பென் பட்டேல் ராஜினாமா செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
இதுபற்றி அமித்ஷாவிடம் கேட்டபோது, நான் தேசிய அரசியலில் உள்ளேன். மாநில அரசியலுக்கு திரும்ப எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்.முதல்-மந்திரி பதவியை பிடிப்பதற்கு கடும் போட்டி ஏற்பட்டால், அமித்ஷாவை முதல்-மந்திரியாக ஆக்குவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. குஜராத் முதல்-மந்திரி இன்றே தேர்வு செய்யப்படலாம் என கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனந்திபென் பட்டேல் தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை. கட்சி மேலிட நிர்பந்தம் காரணமாக அவர் ராஜினாமா செய்தார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.கடந்த 2 ஆண்டு ஆட்சியில் அவருடைய செயல்பாடுகள் சரியில்லை என உள்ளூர் தலைவர்களே குற்றம் சாட்டி உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கிராம பகுதிகளில் பா.ஜனதாவை விட காங்கிரசே அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனந்திபென் பட்டேல் ஆட்சி சரியில்லாததால் தான் பா.ஜனதாவின் செல்வாக்கு சரிந்து விட்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி 12 ஆண்டுகள் தொடர்ந்து இருந்து வந்தார். அவர் இருக்கும் வரை கட்சி செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது.ஆனந்திபென் பட்டேல் முதல்-மந்திரியாக பதவியேற்றதற்கு பிறகு கட்சி செல்வாக்கு படிப்படியாக சரிந்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அடுத்ததாக குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தை ஆனந்திபென் படேல் சரியாக சமாளிக்கவில்லை என்றும், இதன் காரணமாக பட்டேல் சமூகத்தினர் பா.ஜனதாவுக்கு எதிராக மாறி இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதேபோல, தற்போது யுனாவில் தலித் சமூகத்தினர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினையையும் அவர் சரியாக சமாளிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. குஜராத்தில் 8 சதவீத தலித் சமூகத்தினர் உள்ளனர். இவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருந்து வந்தவர்கள். இந்த பிரச்சினையால் அவர்கள் பா.ஜனதாவுக்கு எதிராக மாறக்கூடும் என கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நிலைமை இதே மாதிரி இருந்தால் பா.ஜனதா வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என்று கருதுகின்றனர். எனவே தான் அவரை பதவி விலக மேலிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது.
கடந்த மாதம் 17-ந்தேதி டெல்லியில் கட்சி மேலிட கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆனந்தி பென்பட்டேல் கலந்து கொண்டார். அவரிடம் அப்போதே விரைவில் ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே அவர் இப்போது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
ஆனந்தி பென் பட்டேல் ராஜினாமா செய்தாலும், அவருக்கு உரிய கவுரவத்தை அளிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. எனவே அவர் ஏதாவது ஒரு மாநிலத்தில் கவர்னராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பெரும்பாலும் அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் விரைவில் முடிய உள்ளது.
கவர்னரின் பதவி 5 ஆண்டு காலம் ஆகும். தமிழக கவர்னர் ரோசையா 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி கவர்னர் பதவி ஏற்றார். இந்த மாத இறுதியில் அவருடைய பதவி காலம் முடிகிறது. எனவே புதிய கவர்னர் நியமிக்கப்பட வேண்டும்.ஆனந்திபென் பட்டேலை தமிழக கவர்னராக நியமிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு வேளை குஜராத் அருகே உள்ள மாநிலங்களில் கவர்னராக இருக்க விரும்பினால் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.