குக்கிராமத்தில் பிறந்து அரசியலில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து பாராளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளார்.தமிழகத்தின் தென்மூலையில் நெல்லை மாவட்டம் உவரி அடுத்துள்ள கரைசுத்து என்ற குக்கிராமம்தான் சசிகலா புஷ்பாவின் சொந்த ஊர். கிராமத்து மண்வாசனையோடு கணவர், குடும்பம், குழந்தை என்று வாழ்ந்தாலும் படிப்பு அவரை உயர்த்தி காட்டியது.
கற்ற கல்வியின் வித்தையை சென்னையில் காட்டினார். தனியார் பள்ளி ஆசிரியராக பணியை தொடங்கியவருக்கு சென்னை வாசம் புது அனுபவத்தை கொடுத்தது. அதன் காரணமாக ‘டீம் ஐ.ஏ.எஸ். அகாடமி என்ற பயிற்சி மையத்தை தொடங்கி நடத்தினார். நெல்லையிலும் அந்த பயிற்சி மையத்தின் கிளையை தொடங்கினார். மு
துகலை பட்டதாரியான அவரது அறிவாற்றலும், ஆங்கில புலமையும் கிராமத்து பெண்ணாக இருந்தவரை நகரத்து பெண்ணாக தரம் உயர்த்தியது. சிறு வயதிலேயே அரசியல் மீது இருந்த ஆசை காரணமாக அ.தி.மு.க. மீது ஈடுபாடு கொண்டவர். தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியை பெற்றார். பின்னர் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவர் மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிமுகத்தை பெற்று அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானார்.
2011 சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அந்த தொகுதி கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் தேர்தல் களத்தில் இருந்து விலக வேண்டியதாயிற்று. பின்னர் அதே ஆண்டில் உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மேயராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாநில துணை செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
அடுத்த 2 ஆண்டில் கட்சியின் முக்கிய பதவிகளில் ஒன்றான மகளிர் அணி செயலாளர் ஆனார். 2014-ல் மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லி மேல்-சபை உறுப்பினர் ஆக்கப்பட்டார். டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. கொறடா பதவியும் அவரை தேடி வந்தன. கட்சிக்கு வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே ஏற்பட்ட இந்த அசுரவேக வளர்ச்சியை பார்த்து கட்சிக்காரர்களே ஆச்சரியப்பட்டார்கள். உச்சத்தில் இருந்த சசிகலா புஷ்பாவை சர்ச்சைகளும் பின்தொடர்ந்தன.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்து முனைவர் பட்டம் பெற்றார். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளில் படித்து பெற வேண்டிய பட்டத்தை 3 ஆண்டுகளில் அவரால் எப்படி பெற முடிந்தது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. பதவியில் இருந்து சாதித்து கொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.
பாராளுமன்றத்தின் மாண்புமிகு எம்.பி.யாக பதவி ஏற்ற சசிகலா டெல்லி வடக்கு அவென்யூவில் உள்ள அரசு குடியிருப்பில் குடியேறினார். டெல்லி, சென்னை, தூத்துக்குடி, நெல்லை என்று பறந்து கொண்டிருந்த அவரை காற்றில் பறந்து வந்த ஒரு ஆடியோ உரையாடல் அவரது புகழை தரையிறக்க தொடங்கியது. ஆண் நண்பர் ஒருவரிடம் அவர் பேசுவதாக வெளியான அந்த உரையாடல் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
சசிகலா புஷ்பாவை பற்றி சிறு சிறு புகார்களே கட்சி மேலிடத்துக்கு தெரியவந்த நிலையில் அந்த ஆடியோ ஆதார குற்றச்சாட்டு யோசிக்க வைத்தது. கடந்த ஜனவரி மாதம் மாநில மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரது வெற்றிகரமான அரசியல் பயணத்தில் விழுந்த முதல் அடி அது. அதன் பிறகாவது சர்ச்சைகளில் சிக்கமாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படம் ‘வாட்ஸ்-அப்பில்’ வெளியாகி அடுத்த சர்ச்சையை கிளப்பியது. அது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று கணவர் விளக்கம் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆடியோ, படங்கள் எல்லாம் அடங்கிப்போன நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.யின் கன்னத்தில் விட்ட ‘பளார்’ அறை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பாராளுமன்றத்திலும் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.
எல்லை மீறிப்போன விவகாரங்களால் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். எந்த வேகத்தில் உயரே சென்றாரோ அதே வேகத்தில் சசிகலா கீழே விழுந்துள்ளார். ஆவேசமாக திருச்சி சிவாவை பொது இடத்தில் அடித்து அவப்பெயரை சம்பாதித்தாலும் கட்சியில் நல்ல பெயரை வாங்கலாம் என்ற அவரது எண்ணம் பலிக்கவில்லை.
தெருச்சண்டை எல்லாம் பாராளுமன்றத்தில் விவாதமாகி சர்ச்சையாக உருவெடுத்தது எதிர்பாராதது. ஆத்திரப்பட்டு அடித்து விட்டு பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரும் நிலைக்கு சென்றார் சசிகலாபுஷ்பா. 2020 வரை சசிகலாவின் எம்.பி. பதவி உள்ளது. பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று உறுதியாக கூறி இருக்கிறார். சர்ச்சைக்குள்ளான சசிகலா புஷ்பாவின் வீடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
பாராளுமன்றத்தில் ஆவேசம், ஆதங்கம், கண்ணீர்… என்று உணர்ச்சி பொங்க பேசிய சசிகலாபுஷ்பா காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு பாதுகாப்புக்காக உதவியையும் கோரி இருக்கிறார். வரும் காலத்தில் பாராளுமன்றத்தில் எந்த கட்சியையும் சாராதவர் என்ற தகுதியோடு பதவியை தொடரலாம்.
ஆனால் தொடரும் அவரது அரசியல் பயணம் சர்ச்சை நிறைந்ததாக இருக்குமா? அமைதியாக செல்லுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.