தமிழ்நாட்டு மக்களை டெங்கு தொற்று நோய் பாதிப்பிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக காப்பாற்றியுள்ளார் என சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.சட்டசபையில் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-பொதுவாக பருவகாலங்களில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் தொற்று நோய்களின் தாக்கம் பெரும் சவாலாக உள்ளது. உலகத்திலே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு காய்ச்சல் உள்ளது. நமது முதலமைச்சர் உள்ளாட்சி, பள்ளிக் கல்வி மற்றும் சமூக நலத் துறைகளோடு அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து எடுத்த முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் தமிழகத்திலே டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் முழுக் கட்டுப்பாட்டிலே உள்ளது.
ஏற்கனவே உலகத்தையே அச்சுறுத்திய கொடிய வைரஸ் காய்ச்சல் இன்றைக்கும் உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஜிகா வைரஸ், குஜராத் மாநிலத்தை புரட்டிப்போட்டு உயிர் பலி வாங்கிய பன்றிக் காய்ச்சல், இந்திய தலைநகர் புதுடெல்லியைப் புரட்டிப்போட்ட டெங்கு காய்ச்சல் இவையெல்லாம் அச்சுறுத்தியபோது கூட, தமிழ்நாட்டு மக்களை முதலமைச்சர் டெங்கு தொற்று நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக காப்பாற்றியுள்ளார்.
இன்றைக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலே இந்திய அளவிலே முன்னிடத்தைப் பெற்று நோயாளிகளைக் காக்கின்ற இந்த அரசு, சாதாரண காய்ச்சலாலே ஒருவர் இறக்கின்றார் என்ற நிலையை ஒருபோதும் அனுமதிக்காது. அரசு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக ரூ.33.6 கோடி நிதி ஒதுக்கி 18,165 களப்பணியாளர்களை அமர்த்தி, விழிப்புணர்வு நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர்களுடைய ஆலோசனை பெறாமல் மருந்து கடைகளிலே தனியாக மருந்துகளை விநியோகம் செய்யாமல் தடுக்கின்ற நடவடிக்கைகள், போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை, போன்ற பல்வேறு பன்முக நடிவடிக்கைகள் மூலம் இந்த அரசு இன்றைக்கு தமிழகத்தை நோயற்ற மாநிலமாக உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.