திமுக எம்.பி.,யுடனான சர்ச்சை சம்பவத்திற்குப்பின் நடந்த விசாரணையின்போது அதிமுக கட்சித்தலைவர் ஜெயலலிதா தன்னை அறைந்ததாக மாநிலங்களவையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கூறிய தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்ப, தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் கடந்த சனிக் கிழமை பிற்பகல் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் அப்போது ஒருமையில் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், இன்று மாநிலங்களவை கூட்டத்தில் கலந்து கொண்டார் சசிகலா புஷ்பா. அப்போது பேசிய அவர், “இரு விஷயங்களை பேச விரும்பிகிறேன். கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன்.
திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மையானவர். என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் . திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன். ஆனால், எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்தப் பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன். ஆனால், என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன். இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன்.
என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார். என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார். என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தலைவர் ஒரு எம்.பி யை அறைவது என்ன விதத்தில் சரி. பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்குப் பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில்கூட வாழமுடியவில்லை” என அழுதபடியே தெரிவித்தார் சசிகலா புஷ்பா.
மாநிலங்களவையில் இப்படி பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்த வேளையில்தான், அதிமுக தலைமை,சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு,அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.