தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் பலத்த அனல்காற்று வீசும்!

311 0

தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் பலத்த அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர காலம் வருகிற 28-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் மதுரை, திருச்சி, சேலம், கரூர், நெல்லை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் சுட்டெரிக்கிறது. குறிப்பாக திருத்தணியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகபட்ச வெயில் பதிவாகி வருகிறது.

தலைநகர் சென்னையிலும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயில் கொடுமை தாளாமல் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக் கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் மக்கள் அவதியடைந்தும் வருகின்றனர். கடுமையாக வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் 2 நாட்கள் அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஆந்திராவில் நிலவும் தீவிர வெப்பநிலை மற்றும் பிற மாநிலங்களில் அனல் காற்றின் திசை நகர்வு உள்ளிட்ட காரணங்களால் சத்தீஷ்கார், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. மேற்கண்ட மாநிலங்களில் இன்னும் 2 நாட்கள் பலத்த அனல் காற்று வீசும். ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பகல் நேர சீர் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஆந்திராவில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் இருந்து வடமேற்கு திசையில் வரும் வெப்பக்காற்று காரணமாக தமிழகத்திலும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அடுத்த 2 நாட்கள் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். அதே நேரம் உள்மாவட்டத்தின் ஒருசில இடங்களில் காற்றின் ஈரப்பதம் மற்றும் சீதோஷ்ண நிலையை பொறுத்து மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாகவே காணப்படும். பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாகவும், அனல் காற்றின் தாக்கம் வழக்கத்தை விட கூடுதலாகவும் இருக்கும். மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, தர்மபுரி மாவட்டம் அரூரில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பெய்து உள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர், வேலூர் மாவட்டம் ஆலங்காயம், ஆம்பூர், தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சாத்தனூர் அணையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, திருவாலங் காடு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது.