அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை -பாட்டலி சம்பிக்க ரணவக்க

353 0

கொழும்பு நகரில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடம் தொடர்பாக அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் . இந்த கட்டடத்திற்கு அருகாமையில் உள்ள வீடமைப்பத் தொகுதிக்காக 2009ஆம் ஆண்டில் அதற்கான திட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டபோதிலும் அதற்காக தள ஆய்வு சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த வீடமைப்புத் தொகுதி மற்றும் ஓடைக்கும் இடையில் 21 அடி இடைவெளி இருக்க வேண்டுமென்பது கட்டாய தேவையாகும். வீடமைப்பு கட்டடத் தொகுதியை நிர்மாணிக்கும் போது இந்த இடைவெளிக்கு வழி வகை செய்யப்பட்டபோதிலும், பின்னர் அதன் உரிமையாளர் எந்தவித அனுமதியுமின்றி இந்த 21 அடி இடைவெளியில் ஏழு மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணித்துள்ளார். இந்த கட்டடமே இடிந்து விழுந்தது. இதன் காரணமாக இதன் உரிமையாளருக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவரை கைது செய்வதற்கும் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கபப்ட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பம்பலப்பிட்டி மற்றம் வெள்ளவத்தை பிரதேசங்களில் சுமார் இரண்டாயிரம் சட்டவிரோத கட்டடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, கல்கிசை மற்றும் கொலன்னாவ பிரதேசங்களிலு; சுமார் பத்தாயிரம் சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பில் விரிவான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இவற்றை நிர்மாணத்துவரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.