உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பத்தினர் புத்த மதத்திற்கு மாற இருப்பதாக அறிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரான்புர் மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி ராஜ்புத் மன்னர் மஹாரானா பிரதாப் நினைவு தினம் ஒரு தரப்பினரால் கொண்டாடப்பட்டது. அப்போது ஒலி பெருக்கியில் அதிக ஒலி இருப்பதாக அங்கு வசிக்கும் தலித் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், அவர்களுக்கிடையே பிரச்சனை வெடித்து கலவரமானது.
இந்த கலவரம் தொடர்பாக அம்மாவட்ட போலீசார் இரு தரப்பிலிருந்தும் ஏராளமானவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரூப்தி, ஏக்ரி, கபுர்புர் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த சுமார் 180 தலித் குடும்பத்தினர், தங்களுடைய குடும்பத்தினர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துவதாகவும், இதனால், புத்த மதத்தை தழுவ இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ,”கலவரங்களில் ஈடுபட்டவர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பாவிகளை துன்புறுத்துவதாக கூறுவது பொய்யானது. வேறு மதத்திற்கு மாற இருப்பது அவர்களின் சொந்த முடிவு” எனக் கூறியுள்ளார்.