2 லட்சம் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்த ’ரான்சம்வேர்’ சம்பாதித்தது இவ்வளவுதானா?

282 0

உலகெங்கிலும் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்த ’வான்னாக்ரை’ குழுவினர் இந்திய மதிப்பில் வெறும் 32 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெக் உலகின் அசுரர்களாக சமீபத்தில் உருவெடுத்த ’வான்னாக்ரை’ ஹேக்கிங் குழுவினர் இ-மெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கம்ப்யூட்டருக்கு அனுப்புகின்றனர். கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து விடுகிறது.

குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம், இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸின் தாக்குதலுக்கு உலக முழுவதுமுள்ள மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் தப்பவில்லை.

அனைத்து நாடுகளிலும் உள்ள இணைய பாதுகாப்பு அமைப்புகள் இத்தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கான நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளது.

யாருக்கு பணம் போய் சேர்கிறது என்பதை எளிதாக கண்டறிய முடியாத பிட்காயின் எனும் குறியாக்கம் செய்த பணங்களையே (encrypted money) இக்குழுவினர் பெற்று வரும் நிலையில், இவர்கள் சம்பாதித்தது எவ்வளவு? என்பது குறித்த தகவல்களை பிரிட்டனை சேர்ந்த எல்லிப்டிக் என்ற மென்பொருள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘வான்னாக்ரை’ குழுவினர் பிட்காயின்களை பெற்றுக் கொள்ளும் முகவரியை கண்டறிந்துள்ள இந்நிறுவனம், அம்முகவரியில் உள்ள கணக்கில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே (இந்திய மதிப்பில் சுமார் 32 லட்சம் ரூபாய்) இருப்பதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், ‘வான்னாக்ரை’ குழுவினர் தங்களுடைய பிட்காயின் கணக்கில் இருந்து பெரும் தொகையை வேறு கணக்கிற்கு மாற்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.