தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா ராஜினாமா

257 0

தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தமிழக அரசின் ஆலோசகராக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவர் பவன் ரெய்னா. இவர் கடந்த 12-ந் தேதியன்று தனது ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பிவைத்தார். அரசால் அந்த கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க. கட்சி இரண்டாக உடைந்ததைத் தொடர்ந்து அந்த கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கிவைக்கப்பட்டது. இந்த சின்னத்தை மீட்பதற்கு அ.தி.மு.க. அம்மா அணியின் நிர்வாகி டி.டி.வி.தினகரனிடம் பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த மாதம் 16-ந் தேதியன்று இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவர் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரனும் கடந்த மாதம் 25-ந் தேதி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு இல்லமும், பவன் ரெய்னா பெயரும் பேசப்பட்டு வந்தன.

இரட்டை இலை மீட்பு தொடர்பான பேரம், தமிழ்நாடு இல்லத்தில் நடத்தப்பட்டதாகவும், சிலர் இதற்காக அங்கு தங்கி இருந்ததாகவும் டெல்லி போலீசார் கூறினர். ஆனாலும் இந்த வழக்கில் பவன் ரெய்னா சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.