மாலபே தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தை கண்டிக்கும் வகையிலும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையான காலப்பகுதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன்.டி சொய்சா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,நேற்று முன்தினம் பல்கலைக்கழக மாணவர்களின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் மற்றும் அரசாங்கத்தின் பராமுகம் என்பவற்றை எம்மால் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.
தற்போது தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்துக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை நாடுமுழுவதும் ஆரம்பித்துள்ளோம். அவை அனைத்தையும் அரசாங்கம் கண்ணீ ர்ப்புகை குண்டு கொண்டும் அடாவடித்தனத்தை காட்டியும் அடக்க முயல்கின்றது. இது மிகவும் கொடூரமான தாக்குதலாகும்.
குறித்த தாக்குதலை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையான காலப்பகுதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். எம்மீது எவ்விதமான களங்கம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் சைட்டத்தை ஒழித்தாக வேண்டும். அதன் அபாயத்தை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.
இதற்கென நாம் முன்னெடுத்துள்ள மாகாண மட்ட மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை தொடரவுள்ளோம். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற வகையில் குறித்த தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்வதில் என்னென்ன குறைபாடுகள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் எதிர்க்கட்சி தலைவரிடமும் கலந்துரையாடியுள்ளோம். எனவே தற்போது அடுத்தகட்டமாக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள எமது பொதுக்குழு தீர்மானத்தின்படி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
இதன்காரணமாக நாடு முழுவதும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்கவுள்ளோம். நேற்றுமுன்தினம் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிசார் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டமைக்கு அரசாங்கம் பதில் கூறியாக வேண்டும் என்றார்.