தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அமைப்பின் முன்னாள்ப் போராளி வெற்றிச்செல்வி அவர்களால் வவுனியா பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பாக எழுதப்பட்ட “ஆறிப்போன காயங்களின் வலி” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரில் 30 – 07 – 2016 சனிக்கிழமையன்று மாலை 4.00 மணியளவில் Salvation Army Center Dandenong எனுமிடத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.
தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்த செல்வன் அருந்தவம் பகீரதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலில் கடந்தகால யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தங்களாலும் காவுகொள்ளப்பட்ட தமிழ் உறவுகளின் நினைவாகவும் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டபின்னர் சுகயீனம் காரணமாகவும் விபத்துக்களாலும் சாவடைந்த முன்னாள்போராளிகள் நினைவாகவும் ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
ஈகைச்சுடரை தமிழ் ஏதிலிகள் செயற்பாடுகளில் தீவிரஆதரவாளரான Cathy Robertson அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களையும் பொதுமக்களையும் நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தலைமையுரையைத் தொடர்ந்து வெளியீட்டுரையினை நூலாசிரியர் வெற்றிச்செல்விஅவர்கள் தாயகத்திலிருந்து இணையவழி மூலமாக வழங்கினார்.
அவர் தனதுரையில் “தற்போதும் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கின்ற சமயத்திலும் தான் இந்த புத்தகத்தை வெளியிடுவதால் நாளைக்கும் தான் மீண்டும் கைதுசெய்யப்படலாம் அல்லது காணாமல்போகலாம் என்ற நிலைமைகள் இருக்கின்றபோதும் எதுவந்தாலும் எதிர்கொள்ளத்தயார் என்ற மனத்துணிவுடன் இதை ஒரு வரலாற்றுப்பதிவாக வெளியிடவேண்டும் என்ற அவாவில் வெளியிட்டுள்ளேன் எனவும் தாயகத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டபோது வெளியீட்டு நிகழ்வில் இராணுவப் புலனாய்வாளர்கள் குற்றப் புலனாய்வாளர்கள் பொலிசார் இராணுவத்தினர் என மண்டபம் அரைவாசிக்கு அவர்களே நிறைத்திருந்தார்கள் என குறிப்பிட்டதோடு மற்றயவர்களும் தாங்கள் கண்ட அனுபவித்த சம்பவங்களை எழுத்துவடிவில் வெளிக்கொணரவேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. நூல் வெளியீட்டு நிகழ்வை மெல்பேர்ணில் நீண்டகாலமாக தமிழ்த்தேசியச் செயற்பாடுகளில் முதன்மையாகச் செயற்பட்டுவரும் திரு மகேந்திரன் சிவப்பிரகாசம் நிகழ்த்தினார்.
முதற்பிரதியை திருமதி சுதர்சினி தவச்செல்வம் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்புப்பிரதிகளை அக்கினிக்குஞ்சு இணையத்தள ஆசிரியர் யாழ் எஸ். பாஸ்கர் செல்வி துளசி தெய்வேந்திரன் திரு குமார் நாராயணசாமி மற்றும் மகிந்தினி பரமசிவம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் சிறப்புரையினை திருமதி தமயந்தி சுபாஸ்குமார் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கலை இலக்கியத்துறையின் வளர்ச்சி தொடர்பாகவும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மொழியாக்கற்பிரிவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கி இனியும் படைப்பாக்கற் துறையில் உரிய கவனம் செலுத்தப்பட்டாலே தமிழர் வரலாற்றின் உன்னதமான பதிவுகள் வெளிக்கொண்டுவரப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நூலுக்கான மதிப்பீட்டுரையினை மூத்த செயற்பாட்டாளரும் தமிழ்க்குரல் வானொலியின் ஆசிரியருமான திரு சபேசன் சண்முகம் அவர்கள் நிகழ்த்தினார். ஏற்புரையினை கொற்றவன் நிகழ்த்தினார்.
இறுதியாக நன்றியுரையுடன் மாலை 6.00 மணியளவில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது. இந்நிகழ்வில் மெல்பேர்ணில் வதியும் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.