ஊடகவியலாளர்களை அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் மற்றும் அநியாயங்களில் இருந்து பாதுகாக்கும் விசேட சட்டப் பிரிவொன்றினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உருவாக்கியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலான குழுவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவே ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அமல் ரந்தெனிய தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா, உப தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்டோருடன் சங்கத்தின் தலைமை யகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமல் ரந்தெனிய இதனைத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் இலவச சட்ட ஆலோசனை, சட்ட உதவிகளை எழுத்து மூலமும் வழங்கவும் தேவை ஏற்படின் சட்ட நடவடிக்கை தொடர்பில் தமது சங்க சட்டத்தரணி ஒரு வரை இலவசமாக மன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமல் ரந்தெனிய சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் ஊடகவியலாளர் என்பவர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனவும், சட்ட உதவிகளைப் பெற சட்டத்தரணிகள் சங்கத்தில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுக்க முடியும் எனவும் அமல் ரந்தெ னிய சுட்டிக்காட்டினார்.