மத்திய பாரதிய ஜனதா அரசு நீட் தேர்வின் மூலம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தி உள்ளது என கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் கனிமொழி பேசியுள்ளார்.
தி.மு.க. மாணவர் அணி சார்பில் கோவையில் இந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கருத்தரங்கில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்துகொண்டு பேசினார்.
தமிழ்நாட்டில் நீட்தேர்வு முறையை மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்ததன் மூலம், சமூக உரிமை, இடஒதுக்கீட்டு உரிமை ஆகியவற்றுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை எதிர்க்க வேண்டிய தமிழக அரசு வாய்மூடி மவுனமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இந்தியை கட்டாயமாக்கி தமிழக பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது. கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் சி.பி.எஸ்.இ. பாட திட்டம் இருந்தாலும் அந்தந்த மாநில மொழிகளிலும் மாணவ-மாணவிகள் கட்டாயமாக படிக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்மொழி தொன்மையானது. தமிழர்களின் உயிரோடு கலந்தது. மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில் தமிழுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர். ஆனால் இந்தியாவில் செம்மொழியான தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை. 22 ஆட்சி மொழிகளில் ஒன்றான இந்தியை திணிப்பதில் தான் அக்கறை செலுத்துகிறார்கள். நம் மொழிக்கான இடத்தை சுருக்கி வருகிறார்கள். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்தியை திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். இப்போது மீண்டும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதால், ஜல்லிக்கட்டுக்கு திரண்ட மாணவர் எழுச்சிபோல், ஒரு மெரீனா போராட்டம்போல், மாணவர்களின் போராட்டம் தமிழ்நாட்டில் வெடிக்கும். தமிழ்மொழிக்காகவும், இனத்துக்காகவும் உயிரை கொடுப்பவர்கள் தமிழன் மட்டும்தான் என்று உறுதியாக சொல்ல முடியும். எத்தகைய மறைமுக நடவடிக்கை மேற்கொண்டாலும், தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது.
முன்னதாக கனிமொழி, கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைந்து போகவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு கல்வி கற்க வருகின்றனர். நீட் தேர்வை நோக்கி கல்வி செல்வது தவறானது. சமச்சீர் கல்வி ஒவ்வொரு ஆண்டும் தரம் உயர்த்தப்பட்டது. தமிழக அரசு சென்ற ஆட்சியிலும், இப்போதும் கல்விக்காக எதுவும் செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.