ஆப்கானிஸ்தானில் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி

239 0

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்கர் மாகாணத்தில் ஜலாலாபாத் நகர் அமைந்துள்ளது. இங்கு அந்நாட்டின் அரசுக்கு சொந்தமான தேசிய தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதனுடன் வானொலி நிலையமும் அந்த கட்டிடத்திலேயே அமைந்துள்ளது.

இந்த கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் இன்று திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தத் தொடங்கினர். வெடிகுண்டுகளையும் வீசி வெடிக்கச் செய்தனர். அங்கிருந்த பாதுகாவலர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்கியதில் பாதுகாவலர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், நங்கர்கர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனவே, அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஊடகவியலாளர்கள் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் அதிக அளவில் இருந்தது. கடந்த ஆண்டு 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.