மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி (காணொளி)

349 0

மன்னார் உயிலங்குளம் பகுதியில், இராணுவத்தினரால் 1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வு வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 6 ஆம் நிகழ்வுகள் மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று நடைபெற்றது.

மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் – முருங்கன் 11 ஆம் கட்டை சந்தியில் நேற்று மதியம் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அன்றைய கால கட்டத்தில் உயிலங்குளம் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் மோற்கொண்ட கன்னி வெடித்தாக்குதலின் போது இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து அப்பகுதி ஊடாக மன்னார் நோக்கி சென்ற பேரூந்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில், பேரூந்தின் நடத்துனரான சிங்கள மகனான வில்லியம் உட்பட தமிழ் மக்கள் 34 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.