அரசாங்கம் கண்டுகொள்ளாமல் உள்ளமை மனவருத்தத்தை தருகின்றது – கேப்பாபுலவு

427 0

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தங்களை ஏமாற்றி வருவதாக நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தெருவோரத்தில் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் கண்டுகொள்ளாமல் உள்ளமை மனவருத்தத்தை தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக, தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று 78 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 41 மீனவக் குடும்பங்களும் 97 விவசாயக் குடும்பங்களும் தமது சொந்த நிலத்தை மீட்கும் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி உணவுத் தவிர்ப்பு போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களை கடந்த ஏழு வருடங்களாக முன்னெடுத்துவந்த போதும், இதுவரை தமக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி யுத்தம் இடம்பெற்று தமது உறவுகள் பலரை இழந்த போதிலும், சொந்தக் காணிகளில் வாழ முடியாத நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராம சேவகர் பிரிவில் சூரிபுரம், சீனியாமோட்டை, பிலவுக்குடியிருப்பு, கேப்பாபுலவு பூர்வீகக் கிராமம் ஆகிய கிராமங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில், கேப்பாபுலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய மூன்று கிராமங்களிலும் பெருமளவிலான பகுதிகளை இராணுவத்தினர் ஏற்கனவே விடுவித்திருந்தனர்.

கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் மக்களின் குடியிருப்பு காணிகள், ஆலயங்கள், வயல்நிலங்கள், தோட்டக் காணிகள் உள்ளிட்ட அனைத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி 8 வருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.