நெருப்பாற்று நீச்சலாகி
நீண்டு கிடந்தது
அப்பெரும் மணல்வெளி…
சல்லடையாக்கிய
பிணங்களின் வாடை
நெடிய காற்றாகி
நின்மதியற்று வீசியது….
கொடிய துயரங்கள்
நெருடி அலைமோத….
உயிர் எஞ்சிய
நடை பிணங்களாய்
எதிரியின் பிடிக்குள்ளே
விடிவில்லா இருளாகி
பிணமாகி நகர்ந்த
பொழுது அது …
தொலைக்கக் கூடாத
உறவுகளைத் தொலைத்து…
பிரியக்கூடாத பிறப்புக்களை
பல கூறுகளாகப் பிரிந்து….
மண்டியிடக் கூடாதென
மானப்போர் புரிந்தஇனம் – உலக
வல்லரசுகளின் மறைபீட
வரைபுகளில் சிக்குண்டு…
இழந்துவிடக் கூடாதென
இமைமூடாது காத்திருந்தவற்றில்-இனி
இழப்பதற்கு ஏதுமில்லையென
எல்லாமே இழந்து ….
உதடுகள் உச்சரிக்க மறந்து
கன்னங்களில் உவர் நீர்
வெளித்தோன்ற தயங்கியபடி
நிமிர்ந்த தலைகள் -பகைமுன்
குனிந்து குறுகியபடி….
மனித உருவத்தில் திரியும்
புனிதமான ஆத்துமாக்களைப்போல்
அடிமை எனும் கனதிமிகு
சொல்லுக்குள் அடங்கியபடி….
முட்கம்பி வேலிக்குள்
முடக்கப்பட்ட இந்நாளில்….!
வலிகளும் வேதனைகளும்
துன்பமும் துயரங்களும்
எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும்
கவலையும் காத்திருப்பும்
சுரண்டலும் பழிவாங்கலும்
திணிப்பும் மொழிக் கலப்பும்
இனச்சுத்திகரிப்பும் -எமது
இடங்களின் ஆக்கிரமிப்புமென
வகை வகையாய் எமை
சிங்களம் அரசாள ….
“மெளனம்” எனும்
ஒற்றைச் சொல்லுக்குள்
மூழ்கிக் கிடக்கின்றோம்….!
அள்ளிக் கொடுத்தோம்
எண்ணற்ற உயிர்களை…
விடுதலை வேண்டிய
இனமொன்று வெறுமனே
குந்தி இருத்தல் நலமல்ல….!
கால நீடிப்பும் காத்திருப்பும்
அழகல்ல …!
உறங்கா விழிகளாய் -எமை
காத்துநின்ற உயிர் நிலைகள்…
துயர அலைகள் உயர
எழுந்த போதெல்லாம்
மலையாய்த் தாங்கி -இன்றும்
தாய்மடியில் தவமிருக்கும்
தன்மான மிகுதிகளின் -நல்
எண்ணங்களுக்கு உயிர்கொடுப்போம்…
அணைந்த ஆத்துமாக்களின்
பலிபீடத்தில் ஒளியேற்றி
உறுதிகொண்டு சபதமிட்டு
புலரும் பொழுதொன்றின்
புதிய உயிர்ப்பில்
புனிதங்கள் பேணி
பயணங்கள் தொடர்வோம்.