May 17, 2017
Norway
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் “வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றப்பட்டு நாற்பத்தோராவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில் அத் தீர்மானம் மறக்கடிக்கப்பட்டுவருவது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதபலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை, பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென இத்தால் பிரகடனப்படுத்தப்படுகின்றது.
மேலும், 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்திற்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.
மேலும், ‘தமிழ் ஈழம்’ என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாத்தாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
இவ்வாறு 1976 மே 14 ஆம் தேதியன்று யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் இவ்வாறு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு எதிர்கொண்ட 1977 பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் தமது ஏகோபித்த ஆதரவின் மூலம் அங்கீகாரத்தினை வழங்கியிருந்தார்கள்.
அறவழியும், அரசியல் வழியும் சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சிக்கு முன்னால் தோற்றுப்போனதன் வெளிப்பாடாகத் தோற்றம் பெற்ற ஆயுதப்போராட்டமானது, மக்களின் ஆணையை தனது மூச்சாக்கி மூன்று தசாப்தங்கள் ஓயாது பயணித்துவந்த வேளையில் வரலாற்று இக்கட்டில் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தினையும் தமிழ் மக்களையும் மீட்டெடுக்கும் நோக்கில் 2009 மே-18 அன்று முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத மௌனிப்புடன் தற்காலிக ஓய்வுநிலைக்குள்ளானது.
தமிழ் அரசியல் தலைமையிடம் தமிழ் மக்கள் கையளித்த வரலாற்றுக்கடமையினை தமது கைகளிலேந்தி மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து வந்திருந்தனர் தமிழீழ விடுதலைப் புலிகள். தேர்தல் மூலம் மக்கள் வழங்கிய ஆணையை உலக அரங்கிற்கு கொண்டுசேர்த்திருந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னணியில் அதனை கையிலேந்தி தொடர்ந்து செல்லவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வரலாற்றுக்கடமையில் இருந்து வழிதவறி சிங்கள-சர்வதேச நிகழ்ச்சி நிரலில் பயணித்துவருகிறது.
அதுமாத்திரமன்றி, ‘சுதந்திர தமிழீழம்’ குறித்து மக்கள் சனநாயக வழியில் ஆணை வழங்கிய வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலுப்படுத்தி தமிழர்களின் சுதந்திர வாழ்வை மீட்டெடுப்பதற்கு பதில் அதனை மறக்கடிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றமையானது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுப்பதாக அனைத்துலகத்தாரின் முன்னிலையில் வாக்குறுதியளிப்பதும் பின்னர், தீவிரப்போக்குடைய சிங்கள பௌத்த இனவாத சக்திகளை தூண்டிவிட்டு எதிர்க்கவைத்து அதனைக் காரணம்காட்டி பின்வாங்குவதுமான உபாயத்தின் மூலம் தமிழர்களது தேசிய பிரச்சினைக்கான தீர்வை வெளிப்படையாகவே மறுத்துவருகின்ற நாடகங்கள் இந்த நல்லாட்சி(?) அரசிலும் தொடர்ந்தே வருகிறது.
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் வட்டுக்கோட்டை தீர்மானத்தினை வலுப்படுத்துவது ஒன்றே சிங்களத்தின் தந்திரோபாயங்களை முறியடிப்பதற்கான உபாயமாகும்.பெரும் உயிர் விலை கொடுத்து முன்நகர்த்தி வரப்பட்ட சுதந்திர பிரகடனத்தை வலுப்படுத்தி தமிழீழ விடுதலையை வென்றெடுக்க அனைவரும் பேதமைகள் துறந்து ஒன்றிணையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!