கைவிட்ட வேலை நிறுத்தத்தை மீள ஆரம்பிக்க வேண்டி ஏற்படும்

334 0

மூன்று கோரிக்கைகளை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை மீள் அறிவித்தல் இன்றி மீண்டும் ஆரம்பிக்க வேண்டி ஏற்படும் என, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 24ம் திகதி மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து அன்றிரவே கைவிடப்பட்டது.

அந்தக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை எழுத்து மூலம் பிரதமரின் செயலாளர் வழங்கியதாக, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டீ.ஜே.ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டது புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே எனவும், சட்ட ரீதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டும் என அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டதாகவும் பிரதமரின் செயலாளரின் கையெழுத்துடன் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராஜகருணாவின் கையெழுத்துடன் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா மற்றும் பிரதமருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து அவதானம் செலுத்துகையில், தொழிற்சங்க ஒன்றியத்துடன் பிரதமர் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகள் முரண்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுரம் குறித்த இணக்கப்பாடுகள் செயற்படுத்தப்படவுள்ள கால எல்லையை கருத்தில் கொண்டால், விரைவில் தமது கோரிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட இடமுள்ளதாக தெரியவருவதாகவும், இதற்கமைய, எதிர்வரும் வாரங்களில் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாவிடில், கைவிடப்பட்ட வேலை நிறுத்தம் முன் அறிவித்தல் இன்றி மீளவும் ஆரம்பிக்கப்படும் எனவும், பிரதமருக்கு ராஜகருணா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.