மெக்சிகோவில் விருது பெற்ற பத்திரிகையாளர் ஜேவியர் வால்டெஸ் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடஅமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆயுதம் ஏந்தி செயல்படும் இந்த கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் வெடிப்பதால் பயங்கரமான வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.
மெக்சிகோவின் சினலோவா மாகாணத்தில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றசம்பவங்கள் குறித்து செய்திகள் சேகரித்து வழங்கி வந்தவர் பத்திரிகையாளர் ஜேவியர் வால்டெஸ். அவரது சிறப்பான பணியை பாராட்டி கடந்த 2011-ம் ஆண்டு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு ஆணையம், சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதினை அவருக்கு வழங்கியது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் சினலோவா மாகாணத்தின் தலைநகர் குலியகானில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை சுட்டுக்கொலை செய்துவிட்டனர். அங்கு சமீபகாலத்தில் படுகொலை செய்யப்பட்ட 5-வது பத்திரிகையாளர் இவர்.
ஜேவியர் வால்டெஸ் கொல்லப்பட்டதற்கு அதிபர் என்ரிக் பெனா நீட்டோ மற்றும் மெக்சிகோவுக்கான அமெரிக்க தூதர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள பத்திரிகையாளர்கள் உள்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் ஜேவியர் வால்டெசுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜேவியர் வால்டெசை கொலை செய்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.