வெள்ளை மாளிகைக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபர் – வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது

275 0

அமெரிக்க அதிபர் டிரம்ப் – துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பின் போது பாதுகாப்பு வளையத்தை மீறி வெள்ளை மாளிகைக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. முயன்றதால் வெள்ளை மாளிகை சிறிது நேரத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

துருக்கி அதிபர் டையிப் எர்டோகன் அரசுமுறைப் பயணமாக வாஷிங்டன் நகருக்கு வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – எர்டோகன் இருவரும் நேற்று சந்தித்து சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். சற்று நேரத்திற்கு பின்னர் வெள்ளை மாளிகையின் வடக்குப் பகுதி மதில் சுவரையொட்டி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வளையத்தை தாண்டி மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றார்.
இதை கன்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளவுத்துறை அதிகாரிகள் கவனித்து விட்டனர். அவர்களில் சிலர் உடனடியாக ஓடிச் சென்று அந்த மர்மநபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள அனைத்து நுழைவு வாயில்களும் உடனடியாக மூடப்பட்டன.
தீவிர பரிசோதனைக்கு பின்னர் வேறு யாரும் வெள்ளை மாளிகையின் அருகே நடமாடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின் தற்காலிகமாக மூடப்பட்ட கதவுகள் திறக்கப்பட்டன. ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைதான நபரிடம் போலீசார் விசாரித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.