தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் குழு: அமைச்சர் மணிகண்டன் தகவல்

288 0

தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

அரசு பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்து அதிகாரிகள் பஸ்களை 100 சதவீதம் இயக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பஸ் டிப்போக்களில் அமைச்சர் மணிகண்டன், கலெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து, பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது அமைச்சர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் சீராக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தனியார் பஸ்களும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொ.மு.ச.  உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இதனை  தி.மு.க. தூண்டி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 80 சதவீத  அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தனியார் பஸ்களும் வழக்கத்தை விட கூடுதலாக  இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி தனியார் பஸ்கள்  கூடுதல்  கட்டணம்  வசூலித்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் இதனை கண்காணிக்க அரசு சார்பில் அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்  கூறினார்.