டெங்கு நோயை கட்டுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு

348 0

தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  ; அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். 

டெங்கு ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி தமது நேரடி பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று டெங்கு ஒழிப்புக்காக அரச மற்றும் தனியார் துறை இணைந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 03 மாதக் காலப்பகுதிக்கு டெங்கு ஒழிப்பு காலப் பகுதியாக பிரகடனப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

டெங்கு நோய் வேகமாகப் பரவுவது தொடர்பாகவும் அந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலணியை உடனடியாக இன்று மாலை சந்தித்தார்.

டெங்கு ஒழிப்பு தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஒரு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

டெங்கு நோய் ஒழிப்புக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுற்று நிருபங்களை வெளியிடுவதுடன், அது தொடர்பாக தனியார்த்துறைக்கும் விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கூறினார்.

பாரியளவிலான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படும் பிரதேசங்களில் நீர் தேங்கியிருப்பதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

மேலும் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாள் ஒரு மணிநேரம் சூழலைச் சுத்தம் செய்வதற்கும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக அறிவூட்டுவதற்குமான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

டெங்கு ஒழிப்புக்குத் தேவையான பக்டீரியாக்களை உற்பத்தி செய்யும் செயற்பாட்டினை குறித்த நிறுவனங்களினூடாக இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சூழலில் இருந்து நீக்கி இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு உரிய தெளிவை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ச்சியாக ஊடகங்களினூடாக பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சுற்றாடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை மேலும் பலப்படுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் முப்படையினரும் சுகாதார அமைச்சும் இணைந்து நீண்டகாலமாக நடைமுறைப்படுத்திவரும் நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறும் கூறினார்.

டெங்கு நோயாளிகள் அதிகரித்துள்ளமை காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, களுபோவில மற்றும் ராகம வைத்தியசாலைகளில் தற்காலிக கட்டிடங்களை அமைத்து அந்த நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்.

மாவட்ட அபிவிருத்தி குழுக்களிலும் பிரதேச அபிவிருத்தி குழுக்களிலும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக அந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, அவசர நிலைமையாக இதனைக்கருதி இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தேவையான பௌதீக மற்றும் மனித வளங்கள் தேவைப்படுமிடத்து அதற்கான நடவடிக்கைகளை நிதி அமைச்சினூடாக மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, பைஸர் முஸ்தபா, கயந்த கருணாதிலக்க, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, மேல்மாகாண முதலமைச்சர் இசுர  தேவப்பிரிய, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன்; உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், டெங்கு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம ஆகியோர் இந்த அவசர சந்திப்பில்  கலந்துகொண்டனர்.