யாழ். மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்ற கோரி செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
ஏற்கனவே இந்த மாணவர்கள் கொல்லப்பட்ட விசாரணையில் முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலையீடு செய்வது தொடர்பாக நான் நீதிமன்றில் குற்றஞ்சாட்டியிருந்தேன்.
எமது குற்றச்சாட்டு தொடர்பாக மன்றில் அறிக்கை சமர்பிக்கும்படி நீதிவான் உத்தரவிட்டிருந்தார். எனினும் அந்த உத்தரவுக்கு அமைய இன்றளவும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
அதனை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்த நிலையில் நீதிவானின் உத்தரவின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியை எமக்கு வழங்கும்படி நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதனை கொண்டு மேல் நடவடிக்கைகளுக்கு செல்லுமாறும் எமக்கு கூறியுள்ளார். இதேவேளை சந்தேகநபர்கள் சார்பில் ஒரு சட்டத்தரணி ஆஜராகி வருகிறார்.
மேற்படி சந்தேகநபர்கள் 5 பேரும் தமக்கு சட்டத்தரணிகள் வாதிடுகிறார்கள் என கூறி தமது வழக்கை கொழும்புக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்துள்ளனர்.
இது எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது. இந்த விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நான் ஆஜராகவுள்ளேன்.
இதேவேளை இன்றைய வழக்கு விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.