கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்வதற்கான செயலணியின் அமர்வில் கருத்துக்களை பதிவு செய்த பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென பொலிஸார் அமர்வு நடைபெறும் மண்டபத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர்.
இவ்வமர்பில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு வந்தவர்களை கண்காணிக்கும் வகையில் சிவில் உடையில் பொலிஸார் நின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் இவ்வமர்பில் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்ய வந்தவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான செயலணியின் அமர்வுகள் நாடு முழுவதிலும் நடைபெற்று வருகின்றது. இதற்கமைய வடமாகாணத்திலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் இச் செயலணியின் அமர்வுகள் கடந்த சில நாட்களாக இடம் பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று கரவெட்டி பிரதேச செயலகத்தில் இவ்வமர்வு நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் இச் செயலணியிடம் பதிவு செய்திருந்தனர்.
இதன் போது நெல்லியடிப் பொலிஸார் அங்கு வருகைதந்து கரவெட்டிப் பிரதேச செயலரிடம் என்ன நிகழ்வு நடைபெறுகின்றது என்பது தொடர்பாக விசாரித்துள்ளனர். அதற்கான விளக்கத்தினை பிரதேச செயலர் வழங்கிய போதும் அங்கிருந்து பொலிஸார் விலகிச் செல்லாத காரணத்தினால் இச் செயலணியில் இருந்த சட்டத்தரணி சுஜீவன் வரவழைக்கப்பட்டு பொலிஸாருக்கு அவ்வமர்வு தொடர்பான விளக்கம் கொடுக்கப்பட்டது.
இதன் போது உங்களுக்கு மேலதிகமான பாதுகாப்பு ஏதும் வேண்டுமென்றால் தங்களிடம் கேட்குமாறு கோரிய பொலிஸார் அமர்வு நடைபெறுவதை தான் பார்வையிட்டே ஆகவேண்டும் என்று கூறி அமர்வு நடைபெறும் மண்டபத்திற்கு சென்றிருந்தனர்.இதன் போது அவ்வமர்வுகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த இச் செயலணியின் தேசிய செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து அவ்வமர்வு தொடர்பான விளக்கத்தினை பொலிஸாருக் வழங்கியிருந்தார்.
இதற்கிடையில் அங்கு வந்த மற்றுமொரு பொலிஸார் இவ்வமர்வின் நோக்கம் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பதாகையினை பிரித்து பார்வையிட்டு அப்பதாகையில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக அருகில் நின்ற பொலிஸ் உயர் அதிகாரிக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
இதன் பின்னர் அமர்வு நடைபெறும் இடத்தினை விட்டு வெளியேறிய பொலிஸார் பிரதேச செயலகத்தின் முன்பாக சிறிது நேரம் நின்ற பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.இருப்பினும் சிறிது நேரம் சென்றதும் போக்குவரத்து பொலிஸார் ஒருவர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். மேலும் சிவில் உடை அணிந்த மற்றுமொரு பொலிஸார் பிரதேச செயலக வளாகத்திற்குள் நிலை கொண்டிருந்து அங்கு வந்து செல்பவர்களை கண்காணிக்த்துக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இவ்வமர்பில் கருத்துக்களை பதிவு செய்த பலர் இதில் பங்கு கொண்டதற்காகவே நாங்கள் விசாரணைக்க அழைக்கப்படலாம் என்று ஏற்கனவே செயலணி முன்பாக கூட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#