ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 7,400 கடிதங்களில் ஒன்றுக்கு கூட பதில் இல்லை!

233 0

காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதிக்கு பொதுமக்களால் அனுப்பப்பட்ட 7,400 கடிதங்களில் ஒன்றுக்கு கூட இதுவரை பதில் அளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டம் 80ஆவது நாளை கடந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பங்கு கொண்டவர்கள்.

தமிழ் மக்களது பேராதரவைப் பெற்று ஆட்சியமைத்த இந்த தேசிய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உருப்படியான எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி 7,400 பொதுமக்கள் தனித்தனியாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஜனாதிபதியால் ஒரு கடிதத்திற்கு கூட பதில் அனுப்பி வைக்கப்படவில்லை.ஆகவே, இந்த புதிய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவாக அவர்கள் இருக்கின்றார்களா அல்லது இல்லையா என்று பதிலை வழங்க வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் போராட்டத்தை நடத்துகின்ற இந்த தகரக் கொட்டகைக்குள் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது. அகோரமான வெப்பமான நிலைமை, இடைக்கிடையே கடுமையான மழை, அத்துடன் வாகனங்களின் இரைச்சல், இரவில் நுளம்புக்கடி என்பவற்றுக்கு மத்தியில் இந்த வயது போனவர்கள், நோயாளிகளாக இருப்பவர்கள் தமது பிள்ளைகளுக்காக சாத்வீகமான முறையில் தங்களது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.இந்த நிலையில் வடக்கு, கிழக்கு வாழ் அனைத்து மக்களும், மனித உரிமை அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் நூறாவது நாள் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி இந்த மக்களின் கோரிக்கைக்கு நீதியைப் பெற உதவ வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.இதேவேளை இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் காணாமல் போன உறவுகளைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.