சுவிட்சர்லாந்தில் இந்திய ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

404 0

சுவிட்சர்லாந்தில் இந்திய ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 4 மடங்குக்கு மேல் அதிகரித்து உள்ளது. அதாவது 1442 இந்திய போலி ரூபாய் நோட்டுகள் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள், தங்கள் கருப்பு பணத்தை சேமித்து வருகின்றனர். இதனால் கருப்பு பணத்தின் சொர்க்கமாக அந்த நாடு கருதப்படுகிறது. இப்படி கருப்பு பணத்துக்கு பேர்போன சுவிட்சர்லாந்தில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளின் போலி கரன்சிகள் புழங்கி வருகின்றன.

இந்த போலி கரன்சிகளுக்கு எதிராக சுவிஸ் போலீசார் (பெட்போல்) அதிரடி நடவடிக்கை எடுத்து கள்ள நோட்டுகளை கைப்பற்றி வருகின்றனர். அந்தவகையில் கடந்த 2015-ம் ஆண்டில் 1,000 ரூபாய் நோட்டுகள் 336-ம், 500 ரூபாய் நோட்டுகள் 5-ம், 100 ரூபாய் நோட்டு ஒன்றுமாக மொத்தம் 342 இந்திய ரூபாய் நோட்டுகள் சிக்கின.

2015-ஐ ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட இந்திய ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 4 மடங்குக்கு மேல் அதிகரித்து உள்ளது. அதாவது 1442 இந்திய போலி ரூபாய் நோட்டுகள் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் 1,000 ரூபாய் நோட்டுகள் 1437-ம், மீதமுள்ளவை 500 ரூபாய் நோட்டுகளும் ஆகும்.

எனினும் சமீபத்தில் புழக்கத்தில் விடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் எதுவும் சிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட மேற்படி 1,000, 500 ரூபாய் நோட்டுகளும் தற்போது புழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.