தலைமன்னார் இராமர் அணையில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலைமன்னார் மேற்கு சென்.லோறன்ஸ் மீனவர்கள் கோரிக்கை(காணொளி)

355 0

 

தலைமன்னார் இராமர் அணையில் மீன்பிடிக்க, மீனவர்களுக்கு கடற்படையினரால் விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, தலைமன்னார் மேற்கு சென்.லோறன்ஸ் மீனவர் கூட்டுறவுச்சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இராமர் அணையில் தொடர்ச்சியாக மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தலைமன்னார் மீனவர்களை கடற்படை அதிகாரிகள் அவ்விடத்தில் பிரவேசிக்க தடை விதித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு நீதிகோரி மட்டுப்படுத்தப்பட்ட தலைமன்னார் மேற்கு சென்.லோறன்ஸ் மீனவர் கூட்டுறவுச் சங்கம், கடற்தொழில் நீரியல் வளத்துறை திணக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

2000இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடற்தொழிலை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருவதாகவும் கடற்படை அதிகாரிகள் இராமர் அணையில் இருந்து இனிமேல் மீன் பிடிக்கக் கூடாது என தடைவித்துள்ளமை மக்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் இவ்வளவு காலமாக இவ்வாறு ஒரு தீர்மானத்தை கடற்படை அதிகாரிகள் நிறைவேற்றியதில்லை என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கடற்படை அதிகாரிகளின் இந்த தீர்மானத்தினால் மீனவர்களின் எரிபொருள் செலவு அதிகரிக்கும் எனவும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் மீன்களைப் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படகு அல்லது இயந்திரம் பழுதடையும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பாக தரித்திருக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் இதனால் உயிராபத்து கூட நேரிடலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தலைமன்னார் பிரதேச மக்களின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகள் கிராமிய வளர்ச்சி அனைத்திலும் பாதிப்பும் பின்னடைவும் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களையும், பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு கடற்படை அதிகாரிகள் விடுத்துள்ள தடைகளை நீக்கி இலங்கை நாட்டுக்குச் சொந்தமான 18 கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்கு உட்பட்ட இராமர் அணைப்பகுதியில் தொழில் செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் குறித்த கடிதத்தில் தலைமன்னார் மேற்கு சென்.லோறன்ஸ் மீனவர் கூட்டுறவுச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.