இறுதி யுத்தத்தின்போதும், அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில், காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுமியொருவர், வவுனியாவில் கடைக்கு வேலைக்கு சென்றவேளை காணாமல்போன தனது தாய் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து வவுனியா செட்டிகுளம் முகாமில் வாழ்ந்தபோது, தனது 3 பிள்ளைகளையும் வாழ வைப்பதற்காக வறுமை காரணமாக வவுனியா கச்சேரி கன்ரினில் வேலைக்கு சென்ற தனது மகள், வேலைமுடித்து வீடுதிரும்பிய நிலையிலும் இன்றுவரை வீடு வந்து சேரவில்லை எனவும், எனவே தனது மகளை மீட்டுத்தருமாறும் காணமால் ஆக்கப்பட்ட குறித்த பெண்ணின் தாயார் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.