அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட ஒரு போதும் பின் நிற்க மாட்டேன் -கிழக்கு முதலமைச்சர்

262 0
எவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராகப் போராட தான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
அதற்காக தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த தாம் தயார் எனவும் இதனை தான் அற்ப உலக நோக்கங்களை எதிர்பார்த்து செய்யவில்லை எனவும் இறைவனின் நாட்டத்தை மையப்படுத்தி மாத்திரமே தான் இதை செய்வதாகவும் அவர் கூறினார்,
காத்தான்குடி கர்பலா நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே கிழக்கு முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கர்பலா நகர் மக்கள் 15 வருடத்துக்கும் மேலாக வாழ்ந்து வந்த காணிகள் சிலரால் முறைகேடான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதனால் தாம் இன்று நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் மக்கள் தேரிவித்தனர்.
தமது 15 ஏக்கர் காணி முறைகேடான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளதால் 312 பேருக்கு அநீதி விளைவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு முதலமைச்சரிடம் மக்கள் எடுத்துரைத்தனர்.
அது தொடர்பில் மக்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ,இந்தக் காணி தொடர்பான முழு விபரங்களுக்கும் தமக்கு கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் உரிய சட்டத்தரணிகளிடம் முழுமையான ஆலோசனைகளைப் பெற்று  சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அவர்களிடமும் சட்ட ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டு மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு முதலமைச்சர் மக்களிடம் உறுதியளித்தார்.
அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமக்கு உள்ளதாகவும் அதனைப் பெற்றுக் கொடுப்பதில் என்ன தடங்கல் வந்த போதிலும் தமது முழு முயற்சியையும் , ஒத்துழைப்பையும் தாம் வழங்கவுள்ளதுடன் அதிகாரத்தை பாவிக்க வேண்டிய தேவையேற்பட்டால் அதனை பாவிக்கவும் தயங்கப் போவதில்லை என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.