உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு சோனியாகாந்தி நாளை முதல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது.அங்கு ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய 4 கட்சிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.வழக்கமாக தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தைத் தொடங்கும். ஆனால் உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம்தான் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு உதவியாக இருக்கும் என்பதால் காங்கரஸ் இப்போதே அங்கு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
ஷீலா தீட்சித்தை முதல்- மந்திரி வேட்பாளராக அறிவித்துள்ள சோனியாகாந்தி அங்கு முதல் ஆளாக பிரசாரத்தை தொடங்கவும் தயாராகி உள்ளார். குறிப்பாக மோடியின் வாரணாசி தொகுதியை குறி வைத்து பிரசாரத்தை தொடங்க சோனியா முடிவு செய்துள்ளார்.
நாளை (செவ்வாய்க் கிழமை) சோனியா உத்தரபிரதேசத்தில் சாலையோர பிரசாரத்தை தொடங்குகிறார். வாரணாசியில் பிரசாரத்தை தொடங்கும் சோனியா, கடந்த 2 ஆண்டுகளில் அந்த தொகுதியில் பிரதமர் மோடி பெரிய அளவில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் அமல் படுத்தவில்லை என்பதை முன் நிறுத்தி பிரசாரம் செய்ய வியூகம் வகுத்துள்ளார்.
இந்த பிரசாரம் மூலம் இப்போதே வாக்காளர்கள் மனதில் இடம் பிடித்து விட முடியும் என்று சோனியா நம்புகிறார். சோனியா பிரசாரத்தை உடனுக்குடன் இணையத் தளங்களில் வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே “பனாரஸ் நகரின் வலி” என்ற தலைப்பில் இணையத் தளத்தில் வீடியோ பதிவுகளை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் பேசும் பொதுமக்கள் பிரதமர் மோடியை குறை சொல்லி பேசுகிறார்கள். இந்த இணைய தள பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்க பா.ஜ.க.வின் இணையத்தள பிரிவு தயாராகி வருகிறது.