தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட ராணுவ வீரரின் பெயரில் பள்ளிக்கூடம்

268 0

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட லெப்டினட் உமர் பயாஸ் பெயரை அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு சூட்ட ராணுவம் முடிவெடுத்துள்ளது.

இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாக பணியாற்றி வந்த உமர் பயாஸ் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீர் மாநிலம் படாபூரா என்ற பகுதியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமணத்தில் பங்கேற்றார். அப்போது, பயாசை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

பயாசை அவரது குடும்பத்தினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், மறுநாள் ஹார்மென் என்ற இடத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பயாசின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய ராணுவ கமாண்டிங் அதிகாரி மேஜர் ராஜு, அப்பகுதியில் உள்ள பள்ளியை ‘லெப்டினட் உமர் நல்லொழுக்க பள்ளி’ என பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்த்தார்.

ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சி மையமான தேசிய பாதுகாப்பு அகடாமியில் உமர் பயாஸ் தலைசிறந்த ஹாக்கி மற்றும் வாலிபால் வீரராக திகழ்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.