தமிழகம் முழுவதும் மதுகடைகளை மூடக்கோரி 16-ந்தேதி பா.ஜனதா பேரணி

329 0

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகிற ஜூன் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்றக்கோரி மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகிற ஜூன் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்றக்கோரி மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படும்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி பெண்களும், பொது மக்களும் போராட்டம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த ஏப்ரல் 18 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று அதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் மூடப்பட்டாலும், அவை மீண்டும் புதிய உருவில் குடியிருப்புப் பகுதிகளில் திறக்கப்படுவதை தினந்தோறும் தமிழக மக்கள் கண்கூடாக கண்டு வருகின்றனர். இடங்கள் தான் மாற்றப்படுகிறதே தவிர உண்மையில் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதில்லை.

குடியிருப்பு பகுதிகளில் திறக்கப்படும் கடைகளை மூடச்சொல்லி குடும்பப் பெண்கள் தெருவில் இறங்கி ஆங்காங்கே போராட்டம் செய்வதும் நாம் அறிந்ததே. கடைகளை மூடச்சொல்லி போராடுவதே தமிழக குடும்பங்களை மது என்னும் அரக்கனிடமிருந்து காப்பாற்றத் தான். தமிழக குடும்பங்கள் மதுவின் பாதிப்பால் சீரழிவதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

சேலம் புளியங்குடியில் அண்மையில் பெண்கள் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் செய்தனர். பெண்களுக்கு, குடும்பங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய அரசு நல்லது செய்யாமல், இப்போராட்டத்தை முறியடிக்க எடுத்த முடிவு நம்மை வெட்கி தலை குனியச் செய்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு எதிராக, ஆண்களுக்கு இலவச டோக்கன்கள் டாஸ்மாக் கடையில் குடிக்க வழங்கப்பட்டது. இந்த பகுதியில் பிரிவினையை தூண்டி எப்பாடுபட்டாவது டாஸ்மாக் கடையை நடத்த வேண்டும் என்ற முடிவில் தமிழக அரசு இருப்பதையே காட்டுகிறது.

லஞ்சம், ஊழல் என்று அனுதினம் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்த அரசு அதே ஆயுதத்தை மக்களிடமும் உபயோகிப்பது இவ்வரசின் முக்கிய நோக்கம் எது என்பதை தெளிவுபடுத்துகிறது. எப்பாடுபட்டாவது டாஸ்மாக் கடைகளை நடத்தி பெண்களின் குடும்பங்களை அழிக்க இவ்வரசு முனைவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கடைகளை மூடச் சொல்லி உத்தரவளித்தும், கடைகளை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழக அரசு முடுவெடுத்துள்ளது. அண்மையில் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரே‌ஷன், தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடைபெறும் மிகப்பெரிய ஊழலை படம் பிடித்துக் காட்டியுள்ளது. கடை திறக்க வேண்டிய நேரத்திற்கு முன்பு, கடை மூடிய பின்பு எப்படியெல்லாம் மது விற்பனை நடைபெறுகிறது, மற்றும் திருட்டுத்தனமாக எந்தெந்த நேரங்களில் விற்பனை நடக்கிறது என்று காட்டியுள்ளது.

அது மட்டுமின்றி, ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.20 அல்லது 30 விலையேற்றம் செய்யப்பட்டு, எப்படி ஏழைக் குடும்பங்களின் வியர்வை, உழைப்பு கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதையும் அது காட்டுகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 விலையேற்றம் செய்தாலே வருடத்திற்கு ரூ.3000 கோடி லஞ்சப் பணம் ஆளும் அரசியல் வாதிகளுக்கு கிடைக்கும் ரூ.20, 30 என்று விலையேற்றம் செய்தால் யோசித்துப் பாருங்கள்.

இப்படி தாங்கள் சுகப்பட, அரசியல் கொள்ளை அடிக்க ஏழைப் பெண்களின் குடும்பத்தை சுரண்டும் இந்த போக்கு, பெண்கள் பரிதவிக்கும் வேளையில் இப்படி அவர்களை சுரண்டுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகமாகும். பாவச் செயலாகும்.

இதைத் தாண்டி, தங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள தெருவில் இறங்கி போராடும் பெண்களை உதாசீனப்படுத்துவது, கேவலப்படுத்துவது இந்த அரசுக்கு வாடிக்கை ஆகி விட்டது. ஏப்ரல் 11 அன்று, திருப்பூரில் டாஸ்மாக் போராட்டத்தில், மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே பெண்களை கொலைவெறியுடன் தாக்கி, கன்னத்தில் அறைந்து ஒரு பெண்ணுக்கு காது கேட்காமல் போனதும் நாம் அறிந்ததே போராட்டத்தில் போலீசால் தாக்கப்பட்டவர்களை நான் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன்.

மது அரக்கனால் கணவனிடமிருந்து அடி, உதையிலிருந்து தப்பிக்க அதிகாரிகள் உதவுவார்கள் என்று அபயம் தேடி வரும் தமிழக பெண்களுக்கு, அதிகாரிகளே அடி உதை கொடுத்தால் தமிழகக் குடும்பங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆகவே தமிழக முதல்வர், இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடச்செய்து, தமிழக பெண்களின் துயர் துடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.