போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும்!

366 0

நிலுவை தொகையில் முதல் தவணையாக ரூ.750 கோடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதால், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 13-வது ஊதிய உயர்வு குறித்து நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகையை முழுமையாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.

இதையடுத்து ரூ.500 கோடி முதல் தவணையாக வழங்க அரசு முன்வந்தது. இதை தொழிற்சங்கங்கள் ஏற்காமல், வருகிற 15-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதல்கட்ட தவணையாக ரூ.750 கோடியை வழங்க முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

போக்குவரத்து துறை வரலாற்றில், இப்படி ஒரு பெரும் தொகையை முதல்கட்ட தவணையாக வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதன்பின்னர் அடுத்தடுத்து தவணைகள் வழங்கப்பட்டு, நிலுவை தொகை முழுவதும் வழங்கப்பட்டுவிடும்.

எனவே, முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது, அரசின் இந்த அறிவிப்பை ஏற்று, போராட்டத்தை கைவிட வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன். மே மாதம் கோடை விடுமுறை என்பதால், பொதுமக்கள் அதிகம் பேர் பஸ்களை பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு இந்த போராட்டம், பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை பாக்கியாக சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்குமேல் உள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் வைக்கப்பட்ட பாக்கித்தொகை இல்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக இந்த தொகை உயர்ந்துள்ளது.

எனவே, படிப்படியாக இந்த நிலுவை தொகையை முழுவதுமாக வழங்கப்பட்டுவிடும். இந்த உத்தரவாதத்தை நம்பி, போராட்டத்தை கைவிடவேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கோரிக்கை விடுகிறேன். இதை ஏற்று, அவர்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:-

கேள்வி:- உங்களது கோரிக்கையை போக்குவரத்து தொழிலாளர்கள் ஏற்க மறுத்து, வரும் 15-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டால், என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்:- அரசின் இந்த முடிவுக்கு அண்ணா தொழிற்சங்கம் உள்பட 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால், இருக்கிற தொழிலாளர்களை வைத்து, பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- பஸ் சேவைகளை சலுகைகளை அரசு வாரி வழங்கியதால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனரே?

பதில்:- போக்குவரத்து என்பது சேவையாகும். தமிழகத்தில் ஓடும் 22 ஆயிரம் பஸ்களில், தினமும் 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இதில் வர்த்தக ரீதியில் போக்குவரத்து துறை செயல்பட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.