தமிழகத்தில் புதிதாக மேலும் 7 மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளது. செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக மேலும் 7 மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளது. செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் தமிழக அரசே மணல் விற்பனை நிலையம் அமைத்து அதனை நடத்தும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-ந்தேதி மதுரையில் அறிவித்ததைத் தொடர்ந்து மணல் விற்பனை நிலையங்களை அரசின் நேரடி மேற்பார்வையில் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு மணல் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் நீங்குவதுடன் குறைந்த விலையில் தேவைக்குத் தக்கபடி கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் எந்திரங்கள் மற்றும் மனிதசக்தியை பயன்படுத்தி இயங்கி வருகின்ற மணல் குவாரிகளுடன் மேலும் 7 புதிய மணல் குவாரிகள் அமைக்கவும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
புதிய மணல் குவாரிகளை பரவலாக அமைத்து பொதுமக்களுக்கு மணல் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில், ஆற்றங்கரைக்கு அருகில், அரசு மணல் விற்பனை நிலையங்கள் அமைத்து மணல் விற்பனை செய்யப்படும்.
இதுவரை மணலுக்கான விற்பனை தொகையை வங்கி வரைவோலை மூலமாக மட்டுமே செலுத்தும் நடைமுறை இருந்து வருகிறது. இனி வருங்காலங்களில் ‘டெபிட்’ அல்லது ‘கிரெடிட்’ கார்டு மூலமாகவும் பணம் செலுத்துவதற்கு மணல் விற்பனை நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். பொதுப்பணித்துறையிலும் மணல் விற்பனைக்கு போதுமான பணியாளர்களைப் பயன்படுத்தி மணல் விற்பனை செம்மையாக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவையின் அவசியம் கருதி ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவித்து அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.