தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்க வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

335 0

தமிழர் தாயகப் பகுதிகளில் வீதிகளில் போராடிவரும் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு பதிலாக மூடிமறைக்கும் செயற்பாட்டையே ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவரும் தரப்பினர் முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐரோப்பிய தூதுக்குழுவினரிடம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என கூறியிருப்பதாகவும், இதன் விளைவை மக்களே எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கடந்த இரண்டு மாதங்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களை நேற்று முன்தினம் மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருந்தால், வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் தற்பொழுது விடுவிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இவற்றை மக்கள் விளங்கிக் கொண்டு தங்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கவில்லையென்றால் விடுதலை என்பது பின்நோக்கிச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்