இந்தியா அரசாங்கத்தினால், நவீன வசதிகளுடன் நுவரெலியா டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்திற்கு வருகை தரவுள்ளார்.
அதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும், முன்னேற்பாடுகளை ஆராய்வதற்காகவும், இந்திய உயர்ஸ்தானிகர் த ரஞ்சித் சிங் சந்து மற்றும் இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நேற்று காலை இந்திய உலங்கு வானூர்தி மூலம் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்கினார்கள்.
இவர்களை ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய உறுப்பினர்களான கணபதி கணகராஜ், சத்திவேல், பிலிப்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அத்துடன் இந்திய உயர்ஸ்தானிகருடன், இந்திய பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதியுயர் பாதுகாப்பு குழுவினர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சென்று, அங்கு பிரதமர் நரேந்திர மோடியினை வரவேற்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயந்தனர்.
இதன்போது யாழ்ப்பாண இந்திய தூதரக உதவி தூதுவர் ஏ.நடராஜன் கலந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களை சந்திக்கவுள்ள நோர்வூட் விளையாட்டு மைதானத்தினையும் இந்திய குழுவினர் ஆராய்ந்தனர்.
இதேவேளை 150 கட்டில்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகளுடன் டிக்கோயா வைத்தியசாலையின் பதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.