நாளை மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம்

244 0

சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (12-ந்தேதி) மாலை அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. அம்மா அணி, புரட்சி தலைவி அம்மா அணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளையும் இணைக்க பல முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை பலன் அளிக்கவில்லை.

இந்த நிலையில் சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (12-ந்தேதி) மாலை அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா, கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

செம்மலை எம்.எல்.ஏ. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக நாளை மாலை 6.30 மணியளவில் காரில் பன்னீர் செல்வம் சேலத்திற்கு வருகிறார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பார்கள் என்று புரட்சி தலைவி அம்மா அணி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.

இதனால் சேலம் மாவட்ட புரட்சி தலைவி அம்மா அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதியை கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கைப்பற்றியது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி மார்ச் மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவிலும், போஸ் மைதானத்தில் நடந்த கட்சி விழாவிலும் பங்கேற்றார்.

கடந்த மாதம் 28-ந் தேதி சேலத்திற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தங்கியிருந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அப்போது கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், கட்சியும், ஆட்சியும் நம்மிடம் தான் உள்ளது, அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் பரவாயில்லை என்று அதிரடியாக கூறினார். இதனால் இரு அணிகள் இணைப்பு வி‌ஷயத்தில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சேலத்தில் நடைபெறும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியினரின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வது அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது .

இதற்காக சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சி தலைவி அம்மா அணியில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் அமரும் வகையில் 60 அடி நீளத்தில் 28 அடி அகலத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநரில் முக்கிய சாலைகளில் எல்லாம் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

98 சதவீதம் கட்சி தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக தொடர்ந்து கூறி வரும் புரட்சி தலைவி அம்மா அணியினர் அதனை நிரூபிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து வருகிறார்கள்.