தற்கொலை செய்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் எழுதிய கடிதம் எங்கே?:

336 0

தற்கொலை செய்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் பக்கம் பக்கமாக எழுதிய கடிதம் எங்கே?, அந்த கடிதம் எங்கு உள்ளது, அதில் என்ன விவரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாமக்கல் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் காண்டிராக்டர் சுப்ரமணியம் (வயது 58).நேற்று முன்தினம் செவிட்டுரங்கன் பட்டியில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே அன்று இரவே அவசரம், அவசரமாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான சுப்ரமணியம் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணி உள்பட பல்வேறு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், குவாரிகளில் வருமான வரி சோதனை நடந்த போது நாமக்கல்லில் உள்ள சுப்பிரமணியம் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வருமானத் துறை அதிகாரிகள் சுப்ரமணியத்தை 2 முறை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை சுப்ரமணியம் கூறியதால் வருமான வரித்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.

அவரது வங்கி கணக்குள் முடக்கப்பட்டு அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வருமான வரித்துறையினர் சுப்ரமணியனை விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனால் அவரை தொடர்பு கொண்ட முக்கிய புள்ளிகள் உண்மைகளை சொல்லக்கூடாது என்று நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வருமான வரித்துறை சோதனை நடந்ததும் சுப்ரமணியத்தை தொடர்பு கொண்ட முக்கிய புள்ளிகள், பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகள், தொழில் துறை நண்பர்கள் என பலரும் என்னை பற்றி ஏதும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சொல்லி விடாதீர்கள் எனவும் மிரட்டியுள்ளனர்.

மேலும் இந்த தொடர் விசாரணையில் தன்னை கைது செய்ய வாய்ப்பு இருக்குமோ? என்று பயந்த சுப்ரமணியம் தனது சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த தகவலும் போலீசார் விசாரணையில் தற்போது தெரிய வந்தது.

சுப்ரமணியன் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது மனைவி சாந்தி, மகள் அபிராமி, மகன் சபரி மற்றும் வீட்டில் வேலை பார்த்த பெண், நண்பர்களிடமும் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பண்ணை வீட்டில் வேலை பார்த்த ரத்தினம் என்ற பெண் போலீசாரிடம் கூறுகையில், சுப்ரமணியம் தற்கொலை செய்வதற்கு முந்தைய நாளான 7-ந் தேதி பண்ணை வீட்டில் உள்ள மரத்தடியில் பல மணி நேரம் அமர்ந்து பக்கம், பக்கமாக கடிதம் எழுதியதாக கூறி உள்ளார்.

அந்த கடிதம் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதப்பட்டதா? அல்லது 9-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக வேண்டியிருந்ததால் அதற்காக விளக்கம் ஏதும் எழுதினாரா? என்பது மர்மமாக உள்ளது.

மேலும் அந்த கடிதத்தை கைப்பற்றியது யார் , அதனை மறைக்க காரணம் என்ன? தற்போது அந்த கடிதம் எங்கு உள்ளது, அதில் என்ன விவரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.