திருவாரூரில் அரசு இசைப்பள்ளி புதிய கட்டிடம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

370 0

திருவாரூர் நகரத்தில் 315 சதுர மீட்டர் பரப்பளவில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கான புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தொலைதூரப் பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகளையும் தரக்கட்டுப்பாடு இணைப்பில் கொண்டுவர, தரக்கட்டுப்பாடு செயலாக்கத்தை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, ஊரக வளர்ச்சித் துறை மூலம் 5 நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் சாலைகள்மற்றும் கட்டுமானப் பணிகளின் தரத்தினை உறுதிப்படுத்திட நாகப்பட்டினம், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 35லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 5 நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வக வாகனங்களை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதன் மூலம் மாவட்டங்களில் நடைபெறும் திட்டப் பணிகளின் தர ஆய்வை மேற்கொள்ள இந்த நடமாடும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தரக்கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பணியிடத்திலேயே 15 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். மேலும், ஆய்வு முடிவுகளை இணைய வழி திட்ட கண்காணிப்பு முறையில் நிகழ்நேர பதிவேற்றம் செய்யும் அமைப்புகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம்- திருவலஞ்சுழி, கபர்தீஸ்வரர் திருக்கோயிலில் 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உலோகத் திருமேனி பாதுகாப்பு மையம்; கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் திருவாரூர் நகரத்தில் 315 சதுர மீட்டர் பரப்பளவில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கான புதிய கட்டடம்;

என மொத்தம் 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கோயில் கட்டடங்கள் மற்றும் இசைப்பள்ளி கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் திருவண்ணாமலை- சமுத்திரம் கிராமத்தில் 0.20.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மேலும் 10,000 மிகச்சிறிய திருக்கோயில்களுக்கு 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் பித்தளையாலான தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கும் விளக்கு போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை, திருக்கோயில் பூசாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுக்கு 11 இலட்சம் ரூபாய் செலவில் தினமும் சாயரட்சை பூஜைக்கு பின் 2000 சேவார்த்திகளுக்கு 20 கிராம் அளவில் தொன்னையில் பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம்- இராசிபுரம், மல்லசமுத்திரம், எருமப்பட்டி மற்றும் கொல்லிமலை ஆகிய இடங்களில் தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

ஆண்டிமடம், திருமானூர், பண்ருட்டி, கம்மாபுரம், மொரப்பூர், தாந்தோணி மலை, நாகப்பட்டினம் மற்றும் தலைஞாயிறு, கும்பகோணம், கோட்டூர், புதூர், தொட்டியம், மணி கண்டம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள்;

திருப்பூரில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மண் பரிசோதனை நிலையம்; திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண் பரிசோதனை நிலையக் கட்டடம்;

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் மணப்பாறை, காரைக்குடி, சிவகங்கை, ராஜப்பாளையம், கீவளூர், திருவாரூர் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்புக் கிடங்குகள்;

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் திருநெல்வேலியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தோட்டக்கலைத் தகவல் மற்றும் பயிற்சி மையம்; சிவகங்கையில் 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையம்; திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை மேலாண்மை நிலையம்; என மொத்தம் 42 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.