பஸ் தொழிலாளர்களுடன் 12-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

258 0

வருகிற மே 15-ந் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், 12-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலத்துறை தனி ஆணையம் அழைப்பு விடுத்து உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறை செய்யப்படும். 12-வது ஊதிய ஒப்பந்தம் 31.8.2016-ந்தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து 1.9.2016 முதல் அமலுக்கு வரவேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தத்திற்கான முதல்கட்ட பேச்சு வார்த்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் மார்ச் 7-ந்தேதி நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து 2-வது கட்ட பேச்சு வார்த்தை கடந்த 4-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.

இந்த பேச்சுவார்த்தையிலும் இறுதிகட்ட உடன்பாடு ஏற்படாததால் வருகிற 15-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

போக்குவரத்து ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடியை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்காக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பையும், ஒப்பந்தத்தையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும், பணி ஓய்வு பெற்றவர்களின் பணப் பலன்களுக்கு ரூ.1,500 கோடி வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 12-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை தனி ஆணையம் அழைப்பு விடுத்து உள்ளது.

போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாசிம் பேகம் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்பதாக உறுதி அளித்து உள்ளன.

இது தொடர்பாக சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறும் போது,

நிலுவை தொகை வழங்க அரசு ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி போதாது. அரசு உடனே ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றார்.