அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற காத்திருக்கும் 1½ லட்சம் பட்டதாரிகள்

264 0

அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற 1½ லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கிறார்கள். பட்டமளிப்பு விழா வருகிற 19-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்குள் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருக்கின்றன.

இதனால் நிர்வாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருவததோடு மாணவர்களின் பட்டமளிப்பு விழாவும் தள்ளிப்போகிறது.

துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியிடம் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஆனாலும் யாரை துணைவேந்தராக தேர்வு செய்வது என்ற சிக்கல் நீடித்து வருகிறது. கமிட்டி தேர்வு செய்து கொடுக்கும் நபரின் பெயரை கவர்னர் துணைவேந்தராக நியமிப்பார்.

தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை. மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் பொறுப்பு கவர்னராக கவனித்து வருகிறார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆளும் கட்சியான அ.தி.மு.க 2-ஆக பிரிந்து செயல்படுவதால் அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 19-ந் தேதி அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வருடமாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதால் பட்டமளிப்பு விழா தாமதமாகி உள்ளது.

துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. துணைவேந்தர் நியமிக்கப்படாத பட்சத்தில் அவருக்கு பதிலாக உயர் அதிகாரி ஒருவரை பட்ட சான்றிதழில் கையெழுத்து போடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

மாணவர்கள் பெறக்கூடிய பட்டசான்றிதழில் துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் வேறு ஒருவரை போடக்கூறும் முயற்சிக்கு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

துணைவேந்தர் கையெழுத்திடாத சான்றிதழுக்கு மதிப்பில்லை என்றும் அதனால் உயர்கல்வி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

அண்ணாபல்கலைக்கழகத்தில் சுமார் ஒரு லட்சத்து 52 ஆயிரம் மாணவர்கள் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பல்வேறு தொழில் படிப்புக்களுக்கான பட்ட சான்றிதழ் பெற காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தகுதியான சான்றிதழ் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

வழக்கத்தில் இல்லாத புதிய நடைமுறையை பின்பற்றி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என்று தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்த நிலையில் புதிய துணைவேந்தர் ஒருவரை ஒரு சில நாட்களில் தேடுதல் கமிட்டி கவர்னருக்கு பரிந்துரை செய்ய உள்ளது. அதன் அடிப்படையில் புதிய துணைவேந்தர் விரைவில் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

துணைவேந்தர் இல்லாமல் தவறான முன் உதாரணத்தை பின்பற்றி சிக்கலில் மாட்டிக்கொள்ள அதிகாரிகளும் தயாராக இல்லை என்பதால் பட்டமளிப்பு விழாவிற்கு முன்னதாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார்.

அவர் தலைமையில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.