நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில்,விசேடமாக மேல் , சப்ரகமுவ , மத்திய , வடமேல் , வடமத்திய , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பொழியும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்னலால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்காக அவதானத்துடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் கடலோர பிரதேசங்களில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக சம்மாந்துறை வரை மற்றும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிக்கு அப்பால் கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் .
இதன் காரணமாக குறித்த கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.